போலி ஆவணங்கள் தாக்கல் செய்து நிதி மோசடி: இருவரிடம் விசாரணை
மூணாறு: போலி ஆவணங்கள் மூலம் வீடு கட்டும் நிதியை மோசடி செய்ய முயன்ற சம்பவத்தில் ஊராட்சி உறுப்பினர் உட்பட இருவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.மூணாறு லெட்சுமி எஸ்டேட் மூர்த்தி. இவர் 2009 -- - 2010 நிதி ஆண்டில் வீடு கட்டும் திட்டத்தில் தேவிகுளம் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் நிதி பெற்றார். அதனை மறைத்து மூணாறு ஊராட்சி சார்பில் 'லைப் மிஷன்' திட்டம் மூலம் வீட்டு மனை, வீடு கட்ட நிதி பெற தடையில்லா சான்று கோரி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இவர் ஏற்கனவே நிதியுதவி பெற்றதால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அதன் பிறகு போலி ஆவணங்கள் மூலம் மூணாறு ஊராட்சி வி.ஏ.ஓ.,விடம் மூர்த்தி புதிதாக விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பம் சரிபார்ப்பதற்கு ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டபோது, அவை போலி ஆவணங்கள் என தெரியவந்தது. ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர். மூணாறு போலீசார் மூர்த்தி மீது வழக்கு பதிவு செய்தனர். மூர்த்தி போலி ஆவணங்கள் தயாரிக்க இந்திய கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட வார்டு உறுப்பினர் உதவிய விபரம் தெரியவந்தது. மூணாறு போலீசார் வார்டு உறுப்பினர், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலக ஊழியர் ஆகியோரை நேற்று முன்தினம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வர வழைத்தனர். அவர்களிடம் எஸ்.ஐ., அனில்குமார் தலைமையில் நள்ளிரவு 1:00 மணி வரை விசாரணை நடந்தது. அதன் பின் இருவரையும் விடுவித்தனர். ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலக ஊழியருக்கு சம்பவத்தில் எவ்வித தொடர்பும் இல்லை என போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.