கூடலூர் மாநில நெடுஞ்சாலையில் முறையின்றி நிறுத்தும் டூவீலர்கள் - விபத்துகள் அதிகரிக்கும் அபாயம்
கூடலுார் : கூடலுார் மாநில நெடுஞ்சாலையில் வரைமுறையின்றி ஆங்காங்கே டூவீலர்கள் நிறுத்தப்படுவதால் விபத்து அபாயம் உள்ளது. கூடலுார் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தெற்கு மந்தை வாய்க்கால் வரை மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் 4 கி.மீ., தூர ரோடு உள்ளது. 2022-ல் இருவழிச்சாலையாக அகலப்படுத்தி சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது. பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றாத போதிலும் ரோடு பயன்பாட்டிற்கு வந்தது. புறவழிச்சாலை அமைத்து அதுவும் பயன்பாட்டில் உள்ளது. இருந்தபோதிலும் கூடலுார் நகர்ப் பகுதி வழியாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இருவழிச் சாலையின் ஒரு வழியில் இரண்டு பஸ்கள் செல்லும் வகையில் அமைக்கப்பட்டது. ஆனால் டூ வீலர்கள் பெட்ரோல் பங்க், காய்கறி மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் வரைமுறையின்றி ரோட்டிலேயே அதிகம் நிறுத்தப்படுவதால் தினந்தோறும் வாகன விபத்து நடந்த வண்ணம் உள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர், போலீசார், நகராட்சி நிர்வாகம் இணைந்து நெடுஞ்சாலை ஓரத்தில் டூவீலர்கள் நிறுத்த இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். கட்டுப்பாட்டை மீறி ரோட்டில் நிறுத்தப்படும் டூவீலர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். இந்த நடைமுறைகளை கடைப்பிடித்தால் மட்டுமே விபத்துகள் குறையும் என தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.