18ம் கால்வாயில் விரைவில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல்; மானாவாரியில் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கும் அபாயம்
கூடலுார், : லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றில் இருந்து 18ம் கால்வாயில் பாசனத்திற்கு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.லோயர்கேம்பில் இருந்து போடி வரை உள்ள 18 ம் கால்வாயை நம்பி உத்தமபாளையம், போடி தாலுகாவில் 4615 ஏக்கர் நேரடி பாசன நிலங்கள் உள்ளன. இது தவிர 44 கண்மாய்களில் தண்ணீர் நிரம்புவதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் தண்ணீர் திறக்கப்படும். 2021ல் அணையின் நீர்மட்டம் திருப்திகரமாக இருந்ததால் ஆக. 17ல் தண்ணீர் திறக்கப்பட்டது. 2022ல் செப்.14ல் திறக்கப்பட்டது.2023ல் அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்த போதிலும் கால்வாய் மற்றும் கரைப்பகுதி சீரமைக்காததால் டிசம்பரில் திறக்கப்பட்டது. இதனால் அனைத்து கண்மாய்களும் நிரம்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இக்கால்வாயை நம்பியிருந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து முன்கூட்டியே கால்வாயை சீரமைத்து தண்ணீர் திறக்க கடந்த சில நாட்களாக தொடர்ந்து விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். அணையில் நீர் இருப்பு போதுமானதாக இருந்தும் இதுவரை திறப்பதற்கான அறிவிப்பு வெளியிடவில்லை. நீர்வளத்துறை அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரை செய்து உடனடியாக 18ம் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தினர்.