சுருளி அருவியில் வாகன நிறுத்தம் அமைக்க வலியுறுத்தல்
கம்பம்: சுருளி அருவியில் வார நாட்களிலும், விசேஷ நாட்களிலும் அதிக வாகனங்கள் வருவதால் வாகன நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சுருளி அருவியில் குளிக்க தினமும் அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இது சுற்றுலா தலமாக மட்டுமில்லாமல் ஆன்மிக தலமாகவும் இருப்பதாலும் பொதுமக்கள் அதிகமாக வருகின்றனர். விசேஷ நாட்களில் குறிப்பாக தமிழ் புத்தாண்டு, பொங்கல், தை, ஆடி மற்றும் மகாளய அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவார்கள். வெளிமாவட்டங்களில் இருந்து வரும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் வருவோர் அதனை நிறுத்த இடமின்றி ரோட்டின் இருபுறமும் நிறுத்துகின்றனர். நுழைவு கட்டணம் என்ற பெயரில் சுருளிப்பட்டி ஊராட்சியும், வனத்துறையும் கட்டணம் வசூலிக்கிறது. ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித வசதியையும் செய்து தருவதில்லை. வாகனங்களை நிறுத்துவதற்காக இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே சுருளி அருவியில் வாகன நிறுத்துமிடம் அமைக்க ஊராட்சி, வனத்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி வசூல் செய்யும் கட்டணம், வங்கி கணக்கில் லட்சக்கணக்கில் உள்ளது. கலெக்டர் ரஞ்ஜீத் சிங் இந்த பிரச்னையில் தலையிட்டு அருவிக்கு வெளியில் கூட வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த வேண்டும்.