அவசர கதியில் தார்ரோடு பணி ஆய்வு செய்ய வலியுறுத்தல்
கூடலுார்: கூடலுாரில் வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள முக்கிய சாலையில் அவசரகதியில் கனம் குறைவாக போடப்படும் தார் ரோட்டை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். கூடலுாரில் பல முக்கிய தெருக்களில் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக இருந்தது. இதில் வியாபார நிறுவனங்கள் அதிகமாகவும் வாகனப் போக்குவரத்து கூடுதலாகவும் உள்ள தெருக்களில் தார் ரோடு அமைக்கும் பணி சமீபத்தில் துவங்கியது. ஏற்கனவே ஜல்லிக்கற்கள் அதிகம் இன்றி சேதம்டைந்திருந்த ரோட்டை ஆழப்படுத்தி புதிதாக ஜல்லிக்கற்கள் பரப்பி தார் ரோடு அமைக்க மக்கள் வலியுறுத்திவந்தனர். கூடுதல் வாகனப் போக்குவரத்து உள்ள காமாட்சி அம்மன் கோயில் தெருவில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் இரண்டு மணி நேரத்திற்குள் அவசர கதியில் ரோடு அமைக்கும் பணியை முடித்து விட்டனர். மாவட்ட அதிகாரிகள் புதிதாக அமைக்கும் தார் ரோட்டை ஆய்வு செய்து தரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள்வலியுறுத்தினர்.