உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கண்மாயை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை, முட்செடிகள் உத்தமபாளையம் விவசாயிகள் புலம்பல்

கண்மாயை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை, முட்செடிகள் உத்தமபாளையம் விவசாயிகள் புலம்பல்

உத்தமபாளையம்: உத்தமபாளையம் தாமரைக்குளம் கண்மாயில் அபரிமிதமாக ஆகாய தாமரை வளர்ந்துள்ளதால் முழுமையாக நீர் தேக்க முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைகின்றனர்.உத்தமபாளையத்தில் கோகிலாபுரத்திற்கும், வாய்க்கால்பட்டிக்கும் இடையே 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது தாமரைக்குளம் கண்மாய். 20 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்மாயின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து தென்னை மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்படவில்லை. எஞ்சிய நீர்பிடிப்பு பகுதியும் பராமரிப்பு இன்றி முட்புதர்கள் வளர்ந்து நீர் தேக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.கோகிலாபுரம், வாய்க்கால்பட்டி, ஆனைமலையன்பட்டி, ஒத்தபட்டி, சின்ன ஒவுலாபுரம் வரை உள்ள நூற்றுக்கணக்கான பாசன கிணறுகளுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர இக்கண்மாய் பயன்படுகிறது. கோடை காலங்களில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளுக்கு குடிநீர் தேவையை போக்குகிறது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் போது வாய்க்கால் வழியாக இந்த கண்மாய்க்கு நீர் வந்து சேருகிறது. முறையாக பராமரிக்கப்படாததால் கண்மாய் முழுவதும் ஆகாயத் தாமரை வளர்ந்தும், அதற்கு இணையாக கருவேல மரங்கள் வளர்ந்து காடு போல் காட்சியளிக்கிறது. எஞ்சிய பகுதிகளில் குப்பை கொட்டவும், தென்னை முட்டுக்களை போடும் இடமாக மாறி கண்மாய்க்கான அடையாளம் சிதைந்து வருகிறது. இக் கண்மாய் அவல நிலையறிந்து சமீபத்தில் கல்லூரி மாணவர்கள் செடி கொடிகளை அகற்றியது ஆறுதலான விசயம்.

ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்

அசோக், சமூக ஆர்வலர், உத்தமபாளையம் : உத்தமபாளையம் பரவு பகுதியில் உள்ள வயல்களுக்கு பாசன வசதிக்கு இக் கண்மாய் பயன்படுகிறது . கண்மாய் ஒரு பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சர்வே செய்து கண்மாய் மீட்க வேண்டும். அதன்பின் அகலப்படுத்தி துார்வார வேண்டும். ஆகாய தாமரை, கருவேல மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். முழு அளவில் ஆண்டு முழுவதும் தண்ணீர் தேக்க வேண்டும்.

விவசாயிகளிடம் ஒப்படையுங்கள்

பரசுராமன், பத்திர எழுத்தர், உத்தமபாளையம்: இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு இக் கண்மாய் பயன்பட்டு வருகிறது. ஆனால் ஆகாயத்தாமரை படர்ந்து கண்மாய் முழு அளவில் தண்ணீர் நிரப்ப முடியாத நிலை உள்ளது. முழு அளவில் நிரம்பினால் தோட்ட கிணறுகளின் நீர் மட்டம் குறையாமல் இருக்கும். விவசாயிகளிடம் கண்மாயை ஒப்படைத்து பராமரிக்கலாம். ஆயிரம் கிணறுகளுக்கு மேல் நிலத்தடி நீர் உயர பயன்படும். துார்வாரி பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை