போடி பஸ் ஸ்டாண்டில் வாகன ஆக்கிரமிப்பு: பயணிகள் தவிப்பு நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயக்கம்
போடி: போடி பஸ் ஸ்டாண்டில் பஸ் நிறுத்தும் இடங்களில் கார், வேன், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு செய்கின்றனர். மறுபுறம் பஸ் ஸ்டாண்டிற்குள் வரும் பயணிகளுக்கு நிழற்குடை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தமிழக , கேரளாவை இணைக்கும் வழித்தடத்தில் போடி பஸ்ஸ்டாண்ட் உள்ளது. போடியில் இருந்து கிராம மார்க்கமாக 23 பஸ்களும், தேனி மார்க்கமாக 46 பஸ்களும் செல்கின்றன. பஸ் ஸ்டாண்டில் பஸ்களை தவிர டூவீலர், ஆட்டோ, சுமோ, கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த நகராட்சி 12 ஆண்டுகளுக்கு முன்பு தடை விதித்தது. ஆனால் அதிகாரிகள் நடை முறைப்படுத்த தயங்குகின்றனர். இதனால் தேவாரம் மார்க்கமாக வரும் பஸ்களும், தேனி மார்க்கத்தில் இருந்து போடி வரும் பஸ்களும் ஒரே பாதையில் வருவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றன. பஸ்கள் நிறுத்த வேண்டிய இடத்தில் கார், வேன், டூவீலர்களை நிறுத்துவதால் பஸ்களை உரிய இடங்களில் நிறுத்த முடியாது நிலை உள்ளது. இதனால் பயணிகள் பஸ்ஸ்டாண்டிற்குள் வர அச்சம் அடைகின்றனர். இரவில் கட்ட பஞ்சாயத்தும், சமூக விரோத செயல் நடக்கும் இடமாவும் மாறி உள்ளன. வாகனங்கள் ஆக்கிரமிப்பு மணிகண்டன், போடி: பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் செல்லும் பாதையில் தனி நபர்கள் கார், வேன், ஜீப், டூவீலர்களை நிறுத்தி கடைகளுக்கும், பயணிகளுக்கும் இடையூறு செய்கின்றனர். இது பற்றி நகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. தாய்மார்கள் பாலூட்டும் அறை பயன்பாடு இன்றி பூட்டி உள்ளது. இப்பகுதி போதை ஆசாமிகள் தூங்கும் இடமாகவும், இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கிறது. பஸ் ஸ்டாண்டிற்குள் தஞ்சம் அடைந்துள்ள தெரு நாய்கள் பயணிகளை கடிக்க வருவதால் பயணிகள் பஸ் ஸ்டாண்டிற்குள் வர அச்சம் அடைகின்றனர். தெரு நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் மாயம் சுந்தரம், சமூக ஆர்வலர், சிலமலை : 12 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகளுக்காக நிழற்குடை கட்டப்பட்டது. தற்போத பராமரிப்பு இன்றி சேதம் அடைந்துள்ளது. இதனால் வெயில், மழையால் பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். பஸ்ஸ்டாண்டில் நடக்கும் சமூக விரோத செயல்கள் குறித்து நகராட்சி, போலீஸ், போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. ரூ.பல ஆயிரம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் அமைத்து சில நாட்கள் மட்டும் செயல்பட்டது. தற்போது சுத்திகரிப்பு இயந்திரம் மாயமாகி உள்ளது. பயணிகள் குடிநீர் கிடைக்காமல் சிரமம் அடைந்து வருகின்றனர். பாலித்தீன் பயன்பாட்டை குறைக்க பஸ்ஸ்டாண்டில் மஞ்சப் பை வழங்கும் இயந்திரம் 2 ஆண்டுகளுக்கு முன் செயல்படுத்தப்பட்டது. தற்போது இயந்திரம் பழுதானதால் ரூ.10 செலுத்தினால் மஞ்சப் பை வருவது இல்லை. இதை அதிகாரிகள் கண்டு கொள்வது இல்லை. வாகனங்கள் நிறுத்துவோர் மீது நடவடிக்கை அவசியம் தீர்வு : போடி பஸ்ஸ்டாண்டில் விபத்துகளை தவிர்க்க தேனி, தேவாரம் மார்க்கமாக செல்லும் பஸ்கள் வடக்கு பாதை வழியாகவும், தேனி மார்க்கமாக வரும் பஸ்கள் மேற்கு பக்கம் வழியாக செல்ல வேண்டும். பஸ்ஸ்டாண்டிற்குள் அனுமதி இன்றி வாகனங்கள் நிறுத்த தடை விதிப்பதோடு, மீறி நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். குடிநீர், மஞ்சப் பை இயந்திரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பஸ்கள் நிற்கும் பகுதியில் நிழற்குடை அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.