உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பயன்பாடு இல்லாத மின் இணைப்புகளால் நிதி வீணடிப்பு: கிராம ஊராட்சிகளில் பல லட்சம் மின்கட்டணம் இழப்பு

பயன்பாடு இல்லாத மின் இணைப்புகளால் நிதி வீணடிப்பு: கிராம ஊராட்சிகளில் பல லட்சம் மின்கட்டணம் இழப்பு

ஆண்டிபட்டி: 'மாவட்ட ஊராட்சிகளில் பயன்பாடில்லாத மின் இணைப்புகளால் மாதந்தோறும் மின் கட்டணமாக பல லட்சம் ரூபாய் செலுத்தப்படும் நிலையில், அரசு நிதி வீணடிக்கப்படுகிறது. இதனால் பயன்பாடு இல்லாத மின் இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என, கோரிக்கை வலுத்துள்ளது.ஊராட்சிகளில் குடிநீர் சேவை, சமுதாயக்கூடம், நாடக மேடை, சுடுகாட்டில் தண்ணீர் வசதி ஆகியவற்றிற்காக மின் இணைப்புகள் ஊராட்சிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு ஏற்ப மின் கட்டணம் ஊராட்சிகளின் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும். ஊராட்சிகளின் மக்கள் தொகை, எல்லைக்கு ஏற்ப 30க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் வரை உள்ளன. குடிநீர் வினியோகத்திற்கான 'போர்வெல்' பழுதானால் குழாய்காக வழங்கப்பட்ட மின் இணைப்பு பயனற்று விடும். ஊராட்சி தோறும் இவ்வாறு 10க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் பயணற்று உள்ளன. செயல்பாட்டில் இல்லாத இந்த மின் இணைப்புகளுக்கும் மாதந்தோறும் குறைந்தபட்ச கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது. இதனால் ஒவ்வொரு ஊராட்சியிலும் ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் நிதி இழப்பு ஏற்படுகிறது.

துண்டிக்கும் நடவடிக்கை இல்லை

ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் 130 ஊராட்சிகள் உள்ளன. இங்கு 500க்கும் மேற்பட்ட பயன்பாடு இல்லாத மின் இணைப்புகள் உள்ளன. சில ஊராட்சிகளில் மின் இணைப்புகளை துண்டிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஊராட்சி சார்பில் மின்துறைக்கு மனு கொடுத்த பின், துண்டிக்கும் நடவடிக்கைக்கு 2 முதல் 3 ஆண்டுகள் ஆகின்றன. இணைப்பிற்கான நிலுவையில் உள்ள கட்டணத் தொகை முழுவதையும் செலுத்தினால் மட்டுமே மின் இணைப்பு துண்டிக்கப்படும் என, மின்துறையினர் தெரிவித்து உள்ளனர். மின் கட்டணம் ஊராட்சி நிர்வாகம் மூலம் நேரடியாக செலுத்தப்படுவது இல்லை.மாதந்தோறும் அரசு வழங்கும் ஊராட்சி பராமரிப்பு நிதியில் குறிப்பிட்ட தொகை மின் கட்டணத்திற்கு செலுத்தப்படுகிறது. அரசு மூலம் வழங்கப்படும் தொகை போதுமான அளவு இல்லாததால் ஊராட்சிகளில் லட்சக்கணக்கான ரூபாய் மின் கட்டணம் நிலுவையில் உள்ளது. இதனால் இணைப்புகளை துண்டிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பயன்பாடு இல்லாத இணைப்புகளில் உள்ள நிலுவைத் தொகையை மற்ற இணைப்புகளின் கணக்கில் சேர்த்து, பயனற்ற இணைப்புகளை துண்டிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளலாம். பயனற்ற இணைப்புகளுக்கான நிலுவைத் தொகைக்கு மாவட்ட நிர்வாகம் மூலம், சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து இணைப்புகளை துண்டிக்கலாம். பயனற்ற இணைப்புகளால் மாதந்தோறும் வீணாகும் நிதியை மற்ற வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் ஆலோசனை வழங்க வேண்டும்., என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை