நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தில் 2 ஆயிரம் வீடுகள் வீணாகிறது; பொதுமக்கள் பங்களிப்பு இன்றி பயன் இல்லாத நிலை
மாவட்டத்தில் வீடு இல்லாத பொதுமக்கள், ஆக்கிரமிப்பில் வசித்து அகற்றப்பட்டவர்கள், வனப்பகுதிக்குள் இருந்தவர்களுக்கு சொந்த வீடுகள் வழங்க நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் அடுக்குமாடி குடியிருப்புகள், தனி தனிகுடியிருப்புகள் அமைக்கப்பட்டன. அரசுக்கு சொந்தமான இடங்களில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பெரியகுளம் தாலுகா வடவீரநாயக்கன்பட்டியில் திட்டம் 1, 2, 3 என அம்மாபுரத்தில் இரு திட்டங்கள், பின்னத்தேவன்பட்டியில் ரூ. 31.17 கோடியில் 312 அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்பட்டன. இந்த அடுக்கு மாடி குடியிருப்பில் தற்போது வரை 100 வீடுகளுக்கு மேல் காலியாக உள்ளது. தேனி தப்புக்குண்டு அரசு கலை கல்லுாரி அருகே ரூ.43.2 கோடி செலவில் 431 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதில் 350 வீடுகள் பயன்இன்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த இரு இடங்களிலும் வீடுகள் பயன்பாடின்றி 3 ஆண்டுகளாக 580 வீடுகள் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. தேனி நகராட்சி பொட்டல்களத்தில் ரூ.54.92 கோடியில் 476 தனி வீடுகள் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது. சின்னமனுார், கூடலுார் லோயர்கேம்ப், போடி பரமசிவன் கோவில் தெரு உள்ளிட்ட 10 இடங்களில் சுமார் 3500க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதில் 1100 வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் பல ஆண்டுகளாக பூட்டியே உள்ளன. இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு துறைகள் பல்வேறு முகாம்கள் நடத்தியும் பயனாளிகளை தேர்வு செய்ய முடியவில்லை. பங்களிப்பு தொகை செலுத்த மறுப்பு இதுபற்றி நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'வீடுகளுக்கு அரசு மானியம் போக பயனாளிகள் ரூ. 2 லட்சம் முதல் ரூ. 2.5 லட்சம் வரை செலுத்த வேண்டும். ஆனால், பலரும் வீடுகளை இலவசமாக வழங்க வேண்டும் என பங்களிப்புத்தொகை செலுத்த மறுக்கின்றனர். சிலருக்கு வங்கி கடன் பெற்று தந்தோம். அதில் சிலர் கடனை சரியாக செலுத்தவில்லை. இதனால் மற்ற பயனாளிகளுக்கு கடன் வழங்க வங்கிகள் தயங்குகின்றன. வீடு பெற விரும்புவோர் எஸ்.பி., அலுவலகம் பின் வாரிய அலுவலகத்தில் அணுகலாம் என்றனர். வசதிகள் இல்லை இக் குடியிருப்புகள் பல இடங்களில் நகர்பகுதிக்கு அருகே இருந்தாலும் போக்குவரத்து வசதி, இரவில் பாதுகாப்பு இல்லை. சில இடங்களில் தண்ணீர் பிரச்னை உள்ளது. வீடுகள் பெற்றவர்கள் அங்கு வசிப்பதை தவிர்க்கின்றனர். இதனால் காலி வீடுகளை சமூக விரோத செயல்களுக்கும், குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்த துவங்கி உள்ளனர். ரூபாய் பலகோடி அரசின் நிதியில் கட்டடப்பட்ட வீடுகளுக்கு பயனாளிகளை தேர்வு செய்து வீடுகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.