இடிந்த சாக்கடை சீரமைக்காததால் அடிக்கடி ரோட்டில் ஓடும் கழிவு நீர்
தேனி: பெரியகுளம் -தேனி ரோடு சருத்துப்பட்டி அருகே சாக்கடை தடுப்பு சுவர் சீரமைக்காததால் கழிவுநீர் அடிக்கடி மாநில நெடுஞ்சாலையில் ஓடி வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. பெரியகுளம் -தேனி மாநில நெடுஞ்சாலை முக்கிய வழித்தடமாக உள்ளது. இந்த வழித்தடத்ததில் நீண்ட துாரம் செல்லும் வெளியூர் பஸ்கள், கனரக வாகனங்கள், கார்,வேன், டூவீலர்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரோட்டில் சருத்துப்பட்டி ஊருணியை ஒட்டி செல்லும் கழிவு நீர் மாநில நெடுஞ்சாலை மேற்கு பகுதியில் உள்ள சாக்கடை வழியாக 500 மீ.துாரம் சென்று பாலத்திற்கு கீழே கடந்து செல்கிறது. கழிவுநீர் செல்லும் சாக்கடை தடுப்பு சுவர் சில ஆண்டுக்கு முன் சரிந்து சாக்கடையை மூடியது. இதனால் பாலிதீன் குப்பை அடைத்து கழிவுநீர் தேனி ரோட்டில் தேங்குகிறது. சிறு மழை பெய்தால் கூட சாக்கடை கழிவுநீர் ரோட்டில் குப்பையுடன் தேங்குகிறது. இதனால் ரோட்டில் டூவீலர், வாகனங்களில் வருவோர் சிரமம் அடைகின்றனர். இரவில் கழிவுநீரில் சிக்கி வாகனங்கள் விபத்திற்குள்ளாகின்றன. ரோட்டில் தேங்கும் கழிவுநீரை பல நாட்கள் வேடிக்கை பார்த்து என்றாவது ஒருநாள் மண் அள்ளும் இயந்திரம் மூலம் நெடுஞ்சாலை துறை சீரமைக்கின்றனர். மீண்டும் அடுத்த மழைக்கு ரோட்டில் கழிவுநீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. மேலும் பெரியகுளம்- தேனி இடையே கைலாசபட்டி முதல் மாவட்ட நீதிமன்றம் வரையிலான 5 கி.மீ., ரோடு முறையான பராமரிப்பு இன்றி மேடு, பள்ளங்களாக மாறி வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. ரோட்டை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.