உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தரை தளத்திற்கு உயர்ந்த கிணறுகளின் நீர்மட்டம்

தரை தளத்திற்கு உயர்ந்த கிணறுகளின் நீர்மட்டம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே விவசாய கிணறுகளில் தரை தளத்திற்கு உயர்ந்துள்ள நீர்மட்டம் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்துவதாக உள்ளது.ஆண்டிபட்டி பகுதியில் கடந்த சில வாரங்களில் பெய்த மழையால் விவசாய நிலங்களில் பாசனத்திற்கான தண்ணீர் தேவை குறைந்துள்ளது. வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனத்திற்கு சென்ற நீரால் ஆற்றின் கரையோர விவசாய நிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆண்டிபட்டி ஒன்றியம் டி.அணைக்கரைப்பட்டி, மூனாண்டிபட்டி, தர்மத்துப்பட்டி, புதூர், குண்டலப்பட்டி, நடுக்கோட்டை, புள்ளிமான்கோம்பை ஆகிய கிராமங்கள் வழியாக நீர் வரத்து ஓடைகள் அதிகம் உள்ளன. மழையால் ஓடைகளில் ஏற்பட்ட நீர்வரத்து, ஆற்றின் நீ வரத்தால் கிணறுகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து விட்டது. தற்போது பெரும்பாலான கிணறுகளில் நீர்மட்டம் தரை தளம் வரை உயர்ந்து நிற்கிறது. அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் நீர் சுரப்பால் கிணறுகளின் நீர்மட்டம் உயருகிறது. கிணறுகளின் நீர் இருப்பு கோடைகாலத்திலும் விவசாயத்திற்கு கை கொடுக்கும் என்பதால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !