| ADDED : செப் 17, 2026 07:44 PM
சின்னமனூர், செப் 18 சின்னமனூர் செங்குளம் கண்மாய் மடை அருகே உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் நெல் வயல்களுக்குள் புகுந்ததால் பயிர்கள் சேதம் அடைந்தது. சின்னமனூரில் உடையகுளம் மற்றும் செங்குளம் என இரண்டு கண்மாய்கள் நெடுஞ்சாலையை ஒட்டியே உள்ளன. 75 ஏக்கர் பரப்பளவிலான செங்குளம் கண்மாய் பூலானந்தபுரம், சீலையம்பட்டி கிராமங்களில் உள்ள நெல் வயல்களுக்கு பாசன வசதியளிக்கின்றன. இச் செங்குளம் கண்மாயின் தெற்கு மடை அருகே, நேற்று மாலை கரைக்கு அடியில் உடைப்பு ஏற்பட்டதால் கண்மாய் தண்ணீர், அருகில் உள்ள நெல் வயல்களுக்குள் புகுந்தது. இதனால் நடவு செய்த வயல்களில் நெல் பயிர்கள் நீரில் மூழ்கியது. தகவல் அறிந்து விவசாயிகள் சென்று, மணல் மூடைகளை கொண்டு கரை உடைப்பை அடைத்தனர். உடையப்பு ஏற்பட்டதற்கான காரணம், கரையில் அடி பகுதியில் செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டு, தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி, கரையை உடைத்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.