கிருதுமால் நதிக்காக வைகையில் திறக்கப்பட்ட நீர் நிறுத்தம்
ஆண்டிபட்டி: விருதுநகர் மாவட்டம் கிருதுமால் நதி தேவைக்காக தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக திறக்கப்பட்ட நீர் நேற்று மாலை 4:00 மணிக்கு நிறுத்தப்பட்டது. வைகை அணை நீர்ம ட்டம் அக்., 27ல் அதிகபட்சமாக 70.24 அடியாக உயர்ந்தது. அணை மொத்த உயரம் 71 அடி. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக அணையில் இருந்து தொடர்ந்து நீர் வெளியேறியதால் அணை நீர்மட்டம் 61 அடிவரை குறைந்தது. மழையால் நீர்மட்டம் 63.85 அடியாக மீண்டும் உயர்ந்தது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் கிருதுமால் நதி தண்ணீர் தேவைக்காக டிச., 5ல் வினாடிக்கு 650 கன அடி வீதம் தண்ணீர் ஆற்றின் வழியாக திறந்து விடப்பட்டது. திறக்கப்பட்ட நீர் நேற்று மாலை 4:00 மணிக்கு நிறுத்தப்பட்டது. மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்காக கால்வாய் வழியாக வினாடிக்கு 700 கன அடியும், மதுரை, தேனி, ஆண்டிபட்டி, - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கனஅடியும் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது. நேற்று அணை நீர்மட்டம் 64.01 அடியாக இருந்தது. அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 1608 கன அடியாக இருந்தது.