பி.சி.,பட்டியில் குழாய் உடைந்து குடிநீர் வீண்
தேனி: தேனி வீரபாண்டி ரோட்டில் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி குடிநீர் குழாய் உடைந்து குளம் போல் தேங்கியது.வீரபாண்டி முல்லைப்பெரியாற்றங்கரையில் உறைகிணறு அமைக்கப்பட்டு பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் இந்த பேரூராட்சிக்கு தண்ணீர் செல்லும் குழாய்கள் அடிக்கடி பழுதாகி , உடைந்து தண்ணீர் வீணாவது தொடர்கிறது. இந்நிலையில் வீரபாண்டி, முத்துத்தேவன்பட்டி பிரிவில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. தண்ணீர் ரோட்டோரத்தில் குளம் போல் தேங்கியது. கோடை காலத்தில் இது போன்று தண்ணீர் வீணாவதை தவிர்க்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நேற்று மதியம் 12:30 மணி அளவில் பேரூராட்சி பணியாளர்கள் குழாய் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.