இடிந்து விழும் நிலையில் தண்ணீர் தொட்டிகள்
தேனி:தேனி நகராட்சி பகுதிகளில் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. தேனி அல்லிநகரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. அல்லிநகரம், பாரஸ்ட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்ய 20 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டன. சில ஆண்டுகளுக்கு முன் அனைத்து வீடுகளுக்கும் தனித்தனி இணைப்புகள் வழங்கப்பட்டன. இதனால் இந்த மேல்நிலை தண்ணீர் தொட்டிகள் பயனற்று போனது. தற்போது பல தண்ணீர் தொட்டிகள் இடிந்து விழும்நிலையில் உள்ளன. குறிப்பாக அல்லிநகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பழைய போஸ்ட் ஆபிஸ் ஓடைத்தெரு பூமாரியம்மன் கோவில் எதிர்புறம், பாரஸ்ட்ரோடு பகுதியில் சில இடங்களில் இதே நீடிக்கிறது. ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கும் முன் நகராட்சி அதிகாரிகள் இவற்றை பாதுகாப்பாக அகற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.