கூடலுார் அருகே நெற்பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்:- அச்சத்தில் விவசாயிகள்
கூடலுார் : கூடலுார் அருகே வெட்டுக்காட்டில் நடவு செய்த நெற்பயிர்களை காட்டு யானைகள் வயல்களில் நுழைந்து சேதப்படுத்தியது.கூடலுார் அருகே சுருளியாறு, வண்ணாத்திப்பாறை வனப்பகுதியை ஒட்டி வெட்டுக்காடு உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 500 ஏக்கரில் நெல் சாகுபடி நடந்து வருகிறது. தற்போது முதல் போக சாகுபடிக்காக வயல்களில் நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு வயலுக்குள் நுழைந்த ஐந்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்களை மிதித்து சேதப்படுத்தியுள்ளது. அச்சத்தில் விவசாயிகள்
வனப்பகுதியை ஒட்டியுள்ள தனியார் விளை நிலங்களில் தென்னை, வாழை, மா, இலவம் உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்தி வந்த காட்டு யானைகள் தற்போது நெல் வயல்களிலும் நுழைய துவங்கியுள்ளது. வயல்களை ஒட்டி குடியிருப்புகள் அதிகம் உள்ளது. இதனால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். வனப்பகுதி எல்லையில் அகழி பெயரளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஆழப்படுத்தி யானைகள் வராமல் தடுக்க வனத்துறையினர் முன்வர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.