வனவிலங்கு நடமாட்டம்: ஹெல்ப் டெஸ்க், புகார் பெட்டி திறப்பு
மூணாறு : மூணாறில் வனவிலங்கு நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் வனத்துறை சார்பில் 'ஹெல்ப் டெஸ்க்', புகார் பெட்டி திறக்கப்பட்டன. கேரளாவில் மனித, வனவிலங்கு மோதலை கட்டுப்படுத்தும் வகையில் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்து வரைவு திருத்த மசோதவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து சட்டசபை இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி பொது இடம், மக்கள் வசிக்கும் பகுதி ஆகியவற்றில் நடமாடும் வனவிலங்குகளை தாக்குதல் சுபாவம் கொண்டவைகளாக கருதி, அவற்றை தலைமை வனவிலங்கு பாதுகாவலர் உத்தரவுபடி துப்பாக்கியால் சுடவும், மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும், வேறு இடத்திற்கு கொண்டு செல்லவும் அனுமதி வழங்கப்படும் என வரைவு சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளது. ெஹல்ப் டெஸ்க் திறப்பு : இதனிடையே வனவிலங்கு நடமாட்டம் குறித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் இடுக்கி மாவட்டத்தில் வனத்துறை அலுவலங்களில் புகார் பெட்டி, மூணாறு, தேவிகுளம், இடமலைகுடி, சின்னக்கானல், சாந்தாம்பாறை, பள்ளிவாசல் உட்பட 30 ஊராட்சிகள், கட்டப்பனை நகராட்சி ஆகியவற்றில் ' ஹெல்ப் டெஸ்க்' ஆகியவை திறக்கப்பட்டன. புகார் பெட்டிகள் மூலம் கிடைக்கும் புகார்களுக்கு ஏற்ப அந்தந்த பகுதி வனத்துறை அதிகாரிகள் மூலம் தினமும் மாலை 5:00 மணிக்கு தீர்வு காணப்படும். அல்லாதபட்சத்தில் மாவட்டம், மாநிலம் அளவிலான அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்படும். மூணாறு ஊராட்சியில் ஹெல்ப் டெஸ்க் மற்றும் மூணாறு, இரவிகுளம் ரேஞ்ச்களின் புகார் பெட்டிகள் ஆகியவற்றை மூணாறு வனத்துறை அதிகாரி சாஜூவர்க்கீஸ் நேற்று துவக்கி வைத்தார்.