சின்னமனுார், காமயகவுண்டன்பட்டியில் து.மின் நிலையங்கள் அமைக்கப்படுமா
கம்பம் : சின்னமனுார், காமயகவுண்டன்பட்டியில் துணை மின் நிலையங்கள் அமைக்க நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டத்தில் கம்பம், உத்தமபாளையம், தேவாரம், ராசிங்காபுரம், போடி, பெரியகுளம், மதுராபுரி, தேனி, ஆண்டிபட்டி, காமாட்சிபுரம், சின்ன ஒவுலாபுரம், வண்ணாத்தி பாறை உள்ளிட்ட 19 துணை மின் நிலையங்கள் உள்ளன.30 ஆயிரத்திற்கும் அதிக மின் இணைப்புகள் கொண்ட சின்னமனூருக்கு இதுவரை துணை மின் நிலையம் அமைக்கவில்லை. கடந்த 2004ல் அமைக்க அரசு அனுமதி வழங்கியது. ஆனால் என்ன காரணத்தாலோ இன்று வரை அமைக்கப்படவில்லை. சின்னமனூரில் இடம் தேர்வு செய்வதில் பிரச்னை ஏற்பட்டு மார்க்கையன்கோட்டையில் அமைக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன் மீண்டும் அரசு அனுமதி வழங்கியது . ஆனால் இன்று வரை துணை மின் நிலையம் அமைக்கப்படவில்லை. இதனால் நகரில் மின் சப்ளையில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது.விவசாய மின் இணைப்புகள் அதிகம் உள்ள காமயகவுண்டன்பட்டியிலும் துணை மின் நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. அங்கும் இடம் தேர்வாகியும் பணிகள் துவங்கவில்லை. சின்னமனூர், காமயகவுண்டன்பட்டியில் துணை மின் நிலையங்கள் அமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.