ஆன்லைனில் வேலை தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.6.51 லட்சம் மோசடி
தேனி:பெரியகுளம் அருகே 24 வயது பெண்ணிடம் ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாக கூறி ஏமாற்றி ரூ.6.51 லட்சம் பெற்று மோசடி செய்தவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.பெரியகுளம் வடகரையை சேர்ந்தவர் 24 வயது பெண். திருமணம் முடிந்து குழந்தை உள்ளது. பட்டதாரியான இவர், ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை தேடினார். கடந்த 2025 பிப் 14ல், பெண்ணின் அலைபேசியில் உள்ள டெலிகிராம் செயலி மூலம் தொடர்பு கொண்ட நபர், அவர்கள் அனுப்பும் ஆன்லைன் லிங்க்களை ஓப்பன் செய்தவுடன் லைக்' செய்து, அதனை ஸ்கிரீன் ஷாட்' எடுத்து அனுப்பினால் கமிஷன் கிடைக்கும். இதில் தலா ரூ.10 முதல் 20 ஆர்டர்களுக்கு ரூ.200 கிடைக்கும். உங்கள் திறனை பொறுத்து லாபம் ஈட்டலாம்,' என தெரிவித்தார். பின் இணையத் தளத்தில் பெயர் விபரங்களை பதிவு செய்ய அறிவுறுத்தினார். அதன் பின்பு ரூ.800 செலுத்தி டாஸ்க்கில் இல்லத்தரசி இணைந்தார். ரூ.1040 லாபம் ஈட்டினார். பின் ஆன்லைன் வாலட்டில் பணம் தீர்ந்ததால்,டெலிகிராமில் தொடர்பு கொண்ட நபர் அளித்த வங்கிக் கணக்கில் பணம் செலுத்த அறிவுறுத்தியதால், லாபம் கிடைக்கும்' என, நம்மிய இல்லத்தரசி 2025 பிப்.14 முதல் பிப்.27 வரை பகுதி நேர வேலையில் அதிக லாபம் ஈட்டலாம் என நினைத்து ரூ.6 லட்சத்து 51 ஆயிரத்து 550 ஐ, வங்கிக் கணக்கில் செலுத்தினார். பின் அந்த பணம் ஆன்லைன் வாலட்டிற்கு வராமல் இருந்ததால் அதுகுறித்து இல்லத்தரசி கேட்டதற்கு மேலும் பணம் செலுத்தினால் மட்டுமே, ஆன்லைன் வாலட்டில் பணம் கிடைக்கும் என கூறி காலம் தாழ்த்தினர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இல்லத்தரசி தேனி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், எஸ்.ஐ., தாமரைச்செல்வன் ஆகியோர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.