அணையில் மூழ்கி தொழிலாளி பலி
மூணாறு; இடுக்கி மாவட்டம் பூப்பாறை அருகே ஆனயிறங்கல் அணையில் நீந்த முயன்ற கட்டுமான தொழிலாளி தண்ணீரில் மூழ்கி இறந்தார்.இம்மாவட்டத்தில் நெடுங்கண்டம் அருகே மைனர்சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் கட்டுமான தொழிலாளி ராஜன் 55. இவர் நேற்று பூப்பாறை பகுதிக்கு கட்டுமான பணிக்கு சென்றார். பணி இல்லாததால் நண்பர் செந்தில்குமாருடன் ஆனயிறங்கல் அணைக்கு சென்றவர் அணையில் நீந்தி மறு கரைக்கு செல்வதாக கூறினார். அதனால் செந்தில்குமார் டூவீலரில் மறு கரைக்குச் சென்றார். அணையில் பாதி தூரம் நீந்திச் சென்றவர் எதிர்பாராத வகையில் தண்ணீரில் மூழ்கினார். அதனை கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அணையை ரசித்துக் கொண்டிருந்த சில சுற்றுலா பயணிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அப்பகுதியைச் சேர்ந்த உள்ளூர்வாசிகளிடம் கூறினர். அவர்கள் அணைக்குச் சென்றபோது ராஜன் தண்ணீரில் மூழ்கி மாயமானார். சாந்தாம்பாறை போலீசார் மூணாறு தீயணைப்பு துறையினரின் உதவியுடன் உடலை மீட்டனர். சாந்தாம்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.