சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை
தேனி: ஆண்டிபட்டி அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த டி.சுப்புலாபுரம் கிழக்குத்தெரு கூலித்தொழிலாளி குமரேசனுக்கு 37, ஐந்தாண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆண்டிபட்டி தாலுகாவை சேர்ந்த 14 வயது சிறுமி. இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். 2023 ஆக.28 மாலை சிறுமியும், தம்பியும் பள்ளி விட்டு வீடு திரும்பினர். காட்டில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை வீட்டிற்கு ஓட்டிவர இருவரும், சிறுமியின் உறவினர் மகனுடன் செங்கல் காளவாசல் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த டி.சுப்புலாபுரம் கிழக்குத்தெரு குமரேசன் 37, சிறுமியின் தம்பி, உறவினரை ஆடுகளுக்கு தழை பறித்துவாங்க என அனுப்பினார்.தனியாக இருந்த சிறுமியை செங்கல் காளவாசல் அருகே இழுத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்தார். சிறுமியின் தாயாரின் புகாரில் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் குமரேசனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று விசாரணை முடிந்து, குமரேசனுக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்த நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் இழப்பீட்டுத் தொகை அரசு வழங்க வேண்டும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.