5 பேர் கொலை வழக்கு 11 பேருக்கு ஆயுள் தண்டனை
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், அத்தாளநல்லுாரை சேர்ந்தவர் விவசாயி நவநீதகிருஷ்ணன், 38. உப்பு வாணியமுத்துாரைச் சேர்ந்தவர் சிவனுபாண்டி. இந்த இரு தரப்பினருக்கு இடையே கோவில் கொடை விழா, ஆடுகள் காணாமல் போய் திரும்பி வந்தது தொடர்பாக முன்விரோதம் இருந்தது.கடந்த 2009 மார்ச் 10ல் சிவனுபாண்டி மகன் குணசேகரன், தன் தம்பி சுப்பிரமணியனை சிலர் தாக்கியதை தட்டிக்கேட்க சென்றார். அப்போது, நவநீதகிருஷ்ணன் மற்றும் உறவினர்கள் அர்ச்சுனன், மணிகண்டன் ஆகியோர் சேர்ந்து குணசேகரனை வெட்டிக் கொன்றனர். அதே நாள் மாலை, குணசேகரன் குடும்பத்தினர், நவநீதகிருஷ்ணன் தரப்பினர் வயலில் அறுவடையில் ஈடுபட்டிருந்தபோது, தாக்குதலில் ஈடுபட்டனர்.இரு தரப்பினரும் ஆயுதங்களுடன் மோதிக் கொண்டதில், நவநீதகிருஷ்ணன், அவரது அக்கா பாண்டியம்மாள், 46, பாண்டியம்மாள் மகன் மணிகண்டன், 25, உறவினர் முத்துப்பாண்டி, 30, ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்த இருதரப்பு கொலை வழக்குகளும் திருநெல்வேலி மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், நீதிபதி பன்னீர்செல்வம் முன்னிலையில் நடந்தது. குணசேகரன் கொலை வழக்கில் அர்ச்சுனனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவ்வழக்கில் கைதான மணிகண்டன் இறந்து விட்டார்.நவநீதகிருஷ்ணன், பாண்டியம்மாள், மணிகண்டன், முத்துப்பாண்டி ஆகிய நான்கு பேர் கொலையில், 13 பேர் கைது செய்யப்பட்டனர். அதில், மூன்று பேர் வழக்கு நடந்தபோதே இறந்தனர். மீதமுள்ள, 10 பேருக்கு நான்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது.