மூதாட்டியை கட்டிப்போட்டு நகை பறித்த 4 பேர் கைது
திருநெல்வேலி:திருநெல்வேலியில் இரவில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி கைகளை கட்டி 15 பவுன் நகைகளை பறித்துச் சென்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். நகைகள் மீட்கப்பட்டன.திருநெல்வேலி வண்ணார்பேட்டை அப்பர்சாமி தெருவில் வசிப்பவர் முத்துலட்சுமி 87.கணவர் வேணுகோபால் காங்கிரஸ் பிரமுகர். அவர் காலமானதால் முத்துலட்சுமி தனியாக வசித்து வருகிறார். பிப்., 15 இவரது வீட்டிற்குள் ஹெல்மெட் அணிந்த நபர்கள் இருவர் சென்றனர். அவரது கைகளை கட்டி, வாயை துணியால் அடைத்து அவர் அணிந்திருந்த 15 பவுன் நகைகளை பறித்து சென்றனர்.கொள்ளையர்கள் திருநெல்வேயிலிருந்து நான்கு வழிச்சாலையில் கன்னியாகுமரி நோக்கி நவீன டூவீலரில் சென்றது சி.சி.டி.வி.,கேமரா பதிவுகளில் போலீசாருக்கு தெரியவந்தது. தப்பியவர்களை கண்டுபிடிக்க 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. விசாரணையில், திருட்டில் ஈடுபட்ட என்.ஜி.ஓ., காலனி, திருமால்நகரில் வசிக்கும் சக்கரவர்த்தி 23, வண்ணார்பேட்டை தனியார் பைனான்ஸ் ஊழியர் முத்துராம் 23, கோவையை சேர்ந்தவரும் தற்போது மகிழ்ச்சி நகரில் வசிக்கும் ராஜா 25, வண்ணார்பேட்டை வெள்ளப்பாண்டி 23, கைது செய்யப்பட்டனர். இதில் சக்கரவர்த்தியும் முத்துராமும்தான் மூதாட்டியை தாக்கி நகையை கொள்ளையடித்தனர். மற்ற இருவரும் நகைகளை பைனான்ஸ் நிறுவனத்தில் அடகு வைத்து பணம் பெற முயற்சித்தனர். போலீசாரை திசைதிருப்ப டூவீலருடன் நாகர்கோவில் சென்று அங்கு பதுக்கி வைத்து விட்டு பஸ்சில் திரும்பி வந்துள்ளனர். திருடிய நகையை பைனான்ஸ் நிறுவனத்தின் மூலமாக பணமாக்க முயன்றனர். நகைகள், டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டன. நான்கு பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.திருநெல்வேலியில் சில நாட்களுக்கு முன் ஒரு மூதாட்டியிடம் நான்கு பவுன் செயினை பறித்து தப்பிய கனகராஜ் என்பவரை சில மணி நேரங்களிலேயே பிடித்த குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான குழுவினர் தற்போது இந்த செயின் பறிப்பு வழக்கிலும் விரைவாக துப்புத் துலக்கியுள்ளனர்.