ஜமைக்கா துப்பாக்கி சூட்டில் இறந்த வாலிபர் உடல் நெல்லையில் தகனம்
திருநெல்வேலி; ஜமைக்காவில், கொள்ளையர்கள் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த திருநெல்வேலி வாலிபர் உடல், 75 நாட்களுக்கு பின் சொந்த ஊர் கொண்டு வரப்பட்டது.திருநெல்வேலி ஜங்ஷன் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் விக்னேஷ், 31. தென்காசி மாவட்டம், சுரண்டையை சேர்ந்த ஒருவர் ஜமைக்கா நாட்டில் நடத்தி வரும் சூப்பர் மார்க்கெட்டில், விக்னேஷ் பணிபுரிந்தார்.கடந்த, 2023 டிச., 18ல் சூப்பர் மார்க்கெட்டில் புகுந்த கொள்ளையர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில், விக்னேஷ் உயிரிழந்தார். அவரது உடலை சொந்த ஊர் கொண்டு வர குடும்பத்தினர், மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்தனர்.அங்கிருந்து உடலை கொண்டு வருவதற்கான விமான செலவை செலுத்தாததால், உடலை அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் முயற்சியில் உடல் ஜமைக்காவிலிருந்து, நியூயார்க் வழியாக, கத்தார் ஏர்வேஸ் விமானத்தில், திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டது. பின்னர், ஆம்புலன்சில் அவரது வீட்டுக்கு நேற்று காலை எடுத்து வரப்பட்டது.திருநெல்வேலி எம்.பி., ராபர்ட் ப்ரூஸ், எம்.எல்.ஏ., அப்துல் வகாப் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். சிந்துபூந்துறை மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. விக்னேஷ் உடலை கொண்டு வர முயற்சி மேற்கொண்ட பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மத்திய, மாநில அரசுகளுக்கு, குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.