தங்க நகைகள் பாலிஷ் செய்வதாக கூறி மோசடி: பீகாரை சேர்ந்த 6 பேர் கைது
திருநெல்வேலி:திருநெல்வேலியில் தங்க நகைகளை பாலிஷ் செய்து தருவதாக கூறி மோசடி செய்த மூன்று சிறுவர்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே வடக்கு விஜயநாராயணத்தைச் சேர்ந்தவர் இந்துமதி 26. நேற்று காலை அவர் வீட்டில் இருந்தபோது வந்த நபர்கள் தங்க நகைகளை பளபளக்கும் வகையில் பாலீஷ் செய்து தருவதாக கூறினர். இந்துமதி தன்னுடைய 12 கிராம் எடையுள்ள தங்கச் செயினை அவர்களிடம் கொடுத்தார். அதனை அந்த கும்பல் ஒரு திரவத்தில் முக்கி எடுத்து அவரிடம் கொடுத்தனர். நகைகள் பாலிஷ் ஆக தெரிந்தது. ஆனால் எடை போட்டு பார்த்ததில் ஒன்றரை கிராம் குறைந்திருந்தது. இதனால் அவர் வடக்கு விஜயநாராயணம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் போலீசார் விசாரித்தனர்.இதில் ஈடுபட்டதாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆசீஷ்குமார் 29, மிதுன் குமார் 22, மோனுகுமார் 24, ஆகியோர் மற்றும் மூன்று சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். வாலிபர்களை சிறையில் அடைத்தனர். சிறுவர்கள் மூவரையும் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.இவர்கள் திசையன்விளையில் வாடகைக்கு வீடு பிடித்து தங்கியிருந்து, சுற்றுவட்டார கிராமங்களில் நீண்ட நாட்களாக இத்தகைய மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.