உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கைகலப்பு கூட்டமான கள ஆய்வு கூட்டம் வேலுமணி முன்னிலையில் அ.தி.மு.க.,வினர் அடிதடி

கைகலப்பு கூட்டமான கள ஆய்வு கூட்டம் வேலுமணி முன்னிலையில் அ.தி.மு.க.,வினர் அடிதடி

திருநெல்வேலி:திருநெல்வேலியில் நடந்த அ.தி.மு.க., கள ஆய்வு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி முன்னிலையில் கட்சியினர் அடிதடி, கைகலப்பில் ஈடுபட்டனர்.தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., சார்பில் மாவட்ட வாரியாக கள ஆய்வு கூட்டம் நடந்து வருகிறது.நேற்று திருநெல்வேலி மாநகர் மாவட்ட அ.தி.மு.க., கள ஆய்வு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. தலைமை நிலைய செயலாளர் வேலுமணி தலைமை வகித்தார். அமைப்புச் செயலாளர் வரகூர் அருணாச்சலம், மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.முன்னாள் மாவட்ட செயலாளரும் கட்சி கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான பாப்புலர் முத்தையா பேசுகையில், கடந்த லோக்சபா தேர்தலில் சில பூத்களில் நாம் தமிழர் கட்சியை விட அ.தி.மு.க., குறைவான ஓட்டு பெற்றுள்ளது. சிறப்பாக பணியாற்றி இருந்தால் அதிக ஓட்டுகள் பெற்றிருக்க முடியும். கடந்த வாரம் வாக்காளர் சேர்த்தல் முகாமில் கட்சி மாவட்ட செயலாளர் கணேசராஜா பங்கேற்கவில்லை. புதிய நிர்வாகிகளை அழைத்துக் கொண்டு தலைவரை சந்திக்க சேலம் சென்றிருந்தார்.

மோதல், கைகலப்பு

அன்று நான் கள ஆய்வில் ஈடுபட்டேன். பல இடங்களில் பகுதி செயலாளர்கள் கட்சி நிர்வாகிகள் இல்லை. வரும் தினங்களிலும் இத்தகைய வாக்காளர் சரிபார்ப்பு முகாமை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதை நான் குறையாக சொல்லவில்லை என்றார்.அதற்கு மேடையில் சலசலப்பு ஏற்பட்டது. கட்சியின் பகுதி செயலாளர்கள், நாங்கள் அன்றைய தினம் கட்சிப் பணியாற்றினோம். பாப்புலர் முத்தையா தவறான தகவல் தெரிவிக்கிறார் என எதிர்ப்பு தெரிவித்தனர்.பாப்புலர் முத்தையா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட செயலாளர் கணேஷ ராஜா மைக் அருகில் சென்று மைக்கை கீழே இறக்கினார். நீங்கள் இவ்வாறு பேசக்கூடாது. நான் சேலம் சென்றதை நீங்கள் பார்த்தீர்களா என்றார்.இதனால் பாப்புலர் முத்தையா ஆதரவாளர்களுக்கும் கணேஷராஜா ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல், கைகலப்பு ஏற்பட்டது. இதில் தாழையூத்து மீரான் என்பவர் தாக்கப்பட்டார்.இரு தரப்பினரும் அடிதடியில் ஈடுபட்டனர். தொலைக்காட்சியினரின் கேமரா ஸ்டாண்டுகளை எடுத்தும் தாக்கினர்.இரு தரப்பினர் மோதிக் கொள்வதை பார்த்த எஸ்.பி.வேலுமணி டென்ஷன் ஆனார்.அவர் மைக்கை பிடித்து கட்சியில் பிரச்னை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கட்சி மூத்த நிர்வாகிகள் சொல்லும் கருத்தை கேட்டுக் கொள்ள வேண்டும். அதற்கு மாவட்ட செயலாளர் பதிலளிப்பார். மற்றவர்கள் அமைதி காக்க வேண்டும் என்றார்.மோதல் தொடர்ந்ததால் கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள் பதட்டம் அடைந்தனர். ஓரிருவர் வெளியேற்றப்பட்டனர். அதன் பிறகு கூட்டம் அமைதியாக நடந்தது.வேலுமணி மாலையில் வள்ளியூரில் நடந்த திருநெல்வேலி புறநகர் மாவட்ட கள ஆய்வு கூட்டத்திலும் பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ