அரிவாள் தயாரித்தவர்கள் மீது ஆயுத சட்டம் பாய்ந்தது
திருநெல்வேலி:திருநெல்வேலியில் அரிவாள்கள், கத்திகள் தயாரித்தவர்கள் மீது ஆயுத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே மேல அரியகுளத்தில் சுடலையாண்டி 72, சேர்மவேல் 60, ராமசுப்பிரமணியன் 25 இரும்பு பட்டறை நடத்தி வருகின்றனர். அவர்களது பட்டறையில் அரிவாள்கள் தயாரித்தனர். இதனால் ஆயுத சட்டத்தில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பட்டறையில் இருந்து 9 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது போன்ற பட்டறைகளில் விவசாய பணிகள், மரம் வெட்டுதல் போன்ற பணிகளுக்கான கருவிகள் மட்டும் தயாரிக்க வேண்டும். அபாயகரமான அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்கள் தயாரித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.