மேலும் செய்திகள்
'வன்கொடுமை புகாரில் 1 வாரத்தில் நடவடிக்கை'
21-Mar-2025
திருநெல்வேலி : துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே அரியநாயகபுரத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் தேவேந்திரராஜ், மார்ச் 10ல் வேறு பிரிவு மாணவர்கள் மற்றும் சிறார்களால் தாக்கப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவரை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைய தலைவர் நீதிபதி எஸ்.தமிழ்வாணன், துணைத்தலைவர் இமயம் மற்றும் உறுப்பினர்கள் சந்தித்தனர். தொடர்ந்து, திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சுகுமார் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டனர்.நிவாரணம் வேண்டும்நீதிபதி தமிழ்வாணன் கூறியதாவது:
தேவேந்திரராஜ் மீது கொடூரமாக, காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடந்துள்ளது. இது மனித உரிமைக்கு எதிரானது. டாக்டர்கள், மாணவர் உயிரை காப்பாற்றியுள்ளனர். அவரது இடது கை செயலிழந்துள்ளது.மாணவரின் கல்வி செலவை அரசு ஏற்க வேண்டும். நிவாரணமாக முதற்கட்டமாக, 1.5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அவரது கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு அரசுக்கு பரிந்துரைப்போம்.தென் தமிழகத்தில் பட்டியலினத்தவருக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ஜாதி பெருமை பேசும் எண்ணங்கள், தேசிய தலைவர்களை கூட ஜாதி அடையாளத்தில் பார்ப்பது, ஆண்ட பரம்பரை பேச்சுகள் போன்றவை இந்த சமூக விரோதமான சூழலை உருவாக்கியுள்ளன.நீதிபதி சந்துரு, தென் தமிழகத்தில் ஜாதி பிரச்னைகளை ஆய்வு செய்து அறிக்கை அளித்தார். ஆழமான அறிக்கை என்பதால், அரசியல்வாதிகள் அதை ஏற்க மறுக்கின்றனர். ஜாதி சார்புஜாதி பெயர்கள் பள்ளியில் பயன்படுத்தப்படுவது, ஜாதியை பெருமையாக சொல்லிக் கொள்வது, தலைமை ஆசிரியர் நியமனங்களில் ஜாதி சார்பு காட்டுவது போன்றவை சமூகத்திற்கே ஆபத்தானது. மாநிலம் முழுதும் ஆய்வு நடத்தி ஜாதி வன்முறைகளை கட்டுப்படுத்த தக்க பரிந்துரைகளை அரசு முன்னெடுக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.வட மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில், தென் மாவட்டங்களில் ஜாதி ரீதியான தாக்குதல் அதிகரித்துள்ளதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைய தலைவர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
21-Mar-2025