உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ஊழல் நபர்களுக்கே மீண்டும் ஒப்பந்தம் நெல்லையில் தரமற்ற சாலைகளால் சர்ச்சை

ஊழல் நபர்களுக்கே மீண்டும் ஒப்பந்தம் நெல்லையில் தரமற்ற சாலைகளால் சர்ச்சை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியில், 6.5 கோடி ரூபாய் மதிப்பிலான தார் சாலை அமைப்பு பணிகள் கறுப்பு பட்டியலில் வைக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கே மீண்டும் வழங்கப்பட்டதால், தரமின்றி அமைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியில் தற்போது நடைபெற்று வரும் தார் சாலை அமைப்பு பணிகள் தரமின்றி உள்ளதாக முன்னாள் மாநகர கவுன்சிலர் சுடலைக்கண்ணு புகார் அளித்தார். தன் பகுதியில் அமைக்கப்பட்ட சாலைகளின் நிலை குறித்து புகைப்படங்களுடன் விளக்கம் அளித்தார். இதையடுத்து, அந்த சாலைகள் அவசரமாக மீண்டும் புதுப்பிக்கப்பட்டன. மகாராஜநகர் பகுதியில் தார்சாலை பணிகள் தரமின்றி நடைபெறுவதாக அ.தி.மு.க. பிரமுகர் ஜெனி வீடியோ ஆதாரங்களுடன் புகார் தெரிவித்தார். இதையடுத்து அப்பகுதியில் தார்சாலை மீண்டும் அமைக்கும் பணி நடைபெறுகிறது. தற்போதைய மாநகராட்சி கமிஷனர் மோனிகா ராணா, ஜூன் 25ல் பொறுப்பேற்றார். அதற்கு முன்பே, 6.5 கோடி ரூபாய் மதிப்பிலான தார் சாலைப் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்திருந்தன. இவருக்கு முன் இருந்த கமிஷனர் சுகபுத்ரா மாநகராட்சியில் பணிகளைச் சரிவர செய்யாத நான்கு ஒப்பந்ததாரர்களை கறுப்பு பட்டியலில் சேர்த்து அவர்களுக்கு மீண்டும் ஒப்பந்தம் வழங்கக் கூடாது என அரசுக்கு எழுதியிருந்தார். ஆனால் அவர்களுக்கே மீண்டும் மாநகராட்சி பணிகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் குறித்து, மாநகராட்சி தலைமை பொறியாளர் கண்ணன் கூறுகையில், ''மகாராஜநகர் பகுதியில் தார் சாலை அமைக்கும் போது மழை பெய்ததால், தாரின் வெப்பம் குறைந்தது. இதனால் மணல் கலந்தது போலத் தோன்றியது. புகார் வந்தவுடன் அந்தப் பகுதி சாலை மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. ''தரம் மீறிய ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதிக்கப்படும். ஒப்பந்தத் தொகை முழுமையான ஆய்வுக்குப் பிறகே வழங்கப்படும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை