கார் - பைக் மோதி விபத்து பலி மூன்றாக உயர்வு
திருநெல்வேலி : திருநெல்வேலியில், டூ - வீலர் மீது, கார் மோதிய விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்று ஆனது. திருநெல்வேலியை சேர்ந்தவர் சுரேஷ், 50. டூ - வீலர் உதிரி பாகங்கள் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இவரது மனைவி வருணா, 46. மகள்கள் பிரவீனா, ராசியா, 18. இவர்கள் குடும்பத்துடன், ஆக., 24ல் காரில் துாத்துக்குடி சென்றனர். காரை சுரேஷ் ஓட்டினார். கே.டி.சி.நகர் அருகே சென்றபோது, காரின் பின் டயர் திடீரென வெடித்து பல்டியடித்தது. இதில், எதிரே டூ - வீலரில் வந்த திருநெல்வேலி அரசு மருத்துவமனை பல் சிகிச்சை பிரிவு ஊழியர் மலர், 51, மீது மோதியது. இதில், அவர் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே இறந்தார். காரில் இருந்த சுரேஷ் குடும்பத்தினர் நால்வரும் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதில், வருணா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நேற்று, ராசியா மூளை சாவடைந்தார். அவரது, கல்லீரல், கண்கள், சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டு, டீன் டாக்டர் ரேவதி பாலன், அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினார். மற்ற இருவரும் சிகிச்சையில் உள்ளனர்.