பள்ளி மாணவிக்கு தொந்தரவு டிரைவர், ஹெச்.எம்., கைது
திருநெல்வேலி:அம்பாசமுத்திரத்தில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த, அரசு உதவி பெறும் பள்ளி செயலரின் டிரைவர், உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், 10ம் வகுப்பு மாணவிக்கு அந்த பள்ளியின் செயலர் கந்தசாமியின் டிரைவர் மணிக்குமார், 29, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து, மாணவியின் தாய் புகார் தெரிவித்தார். குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காக பள்ளி நிர்வாகம் அந்த மாணவிக்கு சான்றிதழ்களை கொடுத்து, பள்ளியை விட்டு வெளியேற்றியது. மாணவியை வேறு பள்ளியில் சேர்த்த தாய், இது குறித்து போலீசில் புகார் அளித்தார். இதனிடையே, மாணவிக்கு ஆதரவாக நேற்று முன்தினம் அம்பாசமுத்திரத்தில் போராட்டங்கள் நடந்தன. இதையடுத்து, மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மணிக்குமார், பள்ளி செயலர் கந்தசாமி, தலைமை ஆசிரியர் அழகிய நம்பி, கிளார்க் பூபதி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மணிக்குமார் உடனடியாக கைது செய்யப்பட்டார். தலைமை ஆசிரியர் அழகியநம்பியும் கைது செய்யப்பட்டார். பள்ளி செயலர் மற்றும் கிளார்க் தலைமறைவாக உள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்றும், இங்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.