உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / தி.மு.க., நிர்வாகி வணிக வளாகத்திற்கு சீல்: உயர்நீதிமன்றம் உத்தரவு

தி.மு.க., நிர்வாகி வணிக வளாகத்திற்கு சீல்: உயர்நீதிமன்றம் உத்தரவு

திருநெல்வேலி: திருநெல்வேலி தாழையூத்தில் தி.மு.க., நிர்வாகியின் அனுமதியின்றி கட்டப்பட்ட பல ஆயிரம் சதுர அடி வணிக வளாகத்திற்கு சீல் வைக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. தாழையூத்து நாரணம்மாள்புரத்தில் தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிபாண்டியன், அவரது மனைவி ஈனியம்மாள் ஆகியோர் பெயரில் தரைத்தளம் மற்றும் மூன்று மாடிகளுடன் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. 16 ஆயிரத்து 211 சதுரடி பரப்பிலுள்ள இக்கட்டடத்திற்கு நாரணம்மாள்புரம் டவுன் பஞ்சாயத்து அனுமதி வழங்க முடியாது. திருநெல்வேலி டி.டி.சி.பி., அலுவலகம் தான் அனுமதி வழங்க வேண்டும். நாரணம்மாள்புரம் டவுன் பஞ்சாயத்தில் 5 முறை விண்ணப்பித்து தனித்தனியாக அனுமதி பெற்று ஒரே கட்டடமாக கட்டப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து அப்பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். வணிக வளாகம் கட்டப்பட்டுள்ள பகுதி விவசாய நிலம். அங்கு நீர்வழிப் பாதை உள்ளது. உரிய அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள கட்டடத்தை இடித்து அகற்றுமாறு உத்தரவிடக்கோரியிருந்தார். மேலும் இவ்வழக்கில் மாவட்ட கலெக்டர், டி.டி.சி.பி., இணை இயக்குனர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரி, பொதுப்பணித்துறை அதிகாரி, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்தனர். இதற்கிடையில் கட்டட உரிமையாளர்கள் தரப்பில் நகர்ப்புற வளர்ச்சி திட்ட கூடுதல் செயலர் அலுவலகத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், 'இந்த கட்டடத்திற்கான உத்தரவை டவுன் பஞ்சாயத்தில் பெற முடியாது. அப்படி பெற்றிருப்பது சட்ட விரோதம். கட்டடத்தில் நான்கு புறமும் தேவையான அளவு செட் பேக் நிலம் விடப்படவில்லை. வாகன நிறுத்தமும் போதுமானதாக இல்லை. எனவே டி.டி.சி.பி. இணை இயக்குனர், கட்டடத்திற்குள் யாரும் நுழையாமல் போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N S
நவ 08, 2025 10:19

நல்ல தீர்ப்பு. "கட்டிடத்தில் யாரும் நுழையாத மாதிரி" அபகரிக்கப்பட்ட விலை நிலம், நீர் நிலை, பல வருடங்கள் முடங்கட்டும். மேல் முறையீடு, உயர் நீதிமன்றம், உச்சநீதி மன்றம், என பலவருடங்கள் .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை