| ADDED : செப் 29, 2024 02:41 AM
திருநெல்வேலி:பஞ்சாபை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் 13 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனார். திருநெல்வேலியில் ஐ.என்.எஸ். கடற்படை அருகே மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.திருநெல்வேலி மாவட்டம் வடக்கு விஜயநாராயணத்தில் ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கடற்படை தளம் உள்ளது. சில தினங்களுக்கு முன் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் அடிக்கடி அந்த பகுதியில் சுற்றி திரிவதும் கடற்படை வளாக முகப்பை பார்ப்பதுமாக இருந்தார். கடற்படை ஊழியர்கள் விசாரித்தனர். பார்ப்பதற்கு ராணுவத்தில் பணியாற்றியவர் போல மிடுக்காக இருந்தார். தாடி வைத்திருந்தார். எனவே நாங்குநேரி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.நாங்குநேரி ஏ.எஸ்.பி., பிரசன்னகுமார், அந்த முதியவரிடம் பேசிய போது அவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் எனவும் ராணுவத்தில் மேஜராக பணியாற்றியவர் என்பதையும் அறிந்தார். பின்னர் அவர் நாங்குநேரியில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டார்.திருநெல்வேலி மத்திய உளவு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆதி செல்வம், இது குறித்து பஞ்சாப் போலீசுக்கு தெரிவித்தார். அங்கு பதான்கோட் போலீஸ் ஸ்டேஷனில் கந்தர்வ்சிங் 73, என்ற ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் காணாமல் போனது குறித்து புகார் இருந்தது. அவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒப்படைப்பு
கந்தர்வ்சிங்கின் மகன்கள் சுனில்சிங், அனில் சிங் ஆகியோர் விமானம் மூலம் தந்தையை தேடி திருநெல்வேலி வந்தனர். தந்தையை பார்த்து ஆரத்தழுவினர்.ராணுவத்தில் மேஜராக பணியாற்றிய கந்தர்வ்சிங்கின் முதல் மனைவி இறந்து விட்டதால் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அப்பெண்ணின் கொடுமையால் மகன்களும் ,கந்தர்வ்சிங்கும் பாதிக்கப்பட்டனர். அவர் 2011 ஜூன் 6ல் காணாமல் போனார். அவர் எப்படி திருநெல்வேலி வந்தார் என்பது தெரியவில்லை. கடற்படைதளம் அருகில் அடிக்கடி நிற்பதும் வேடிக்கை பார்ப்பதுமாக இருந்ததால் அதன் மூலம் அவர் யாரென கண்டறியப்பட்டுள்ளார். மகிழ்ச்சியுடன் தந்தையை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர் மகன்கள். அவரை குடும்பத்தினரிடம் சேர்ப்பதற்கு முயற்சி எடுத்த ஏ.எஸ்.பி. பிரசன்னகுமார், இன்ஸ்பெக்டர் நாககுமாரி, மத்திய உளவு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆதிசெல்வம் ஆகியோரை உயரதிகாரிகள் பாராட்டினர்.