உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / நெல்லையப்பர் கோயிலுக்கு புதிய யானை; நாளை அதிகாரிகள் ஆலோசனை

நெல்லையப்பர் கோயிலுக்கு புதிய யானை; நாளை அதிகாரிகள் ஆலோசனை

திருநெல்வேலி : திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு புதிய யானை வாங்குவது குறித்து நாளை ஆலோசனை நடக்க உள்ளது. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் 1983ல் வந்த யானை காந்திமதி கடந்த ஜனவரி 12ல் தமது 56 வயதில் காலமானது. கோவிலில் நடக்கும் அதிகாலை திருவனந்தல் பூஜை, கஜ பூஜை மற்றும் தாமிரபரணி நதியிலிருந்து தினமும் தீர்த்தம் எடுத்து வருதல், விழா காலங்களில் சுவாமி வீதி உலா புறப்பாடுகளில் முன் செல்வது தேரோட்டத்தில் அலங்கரிக்கப்பட்டு முன்பாக செல்வது என அனைத்து நிகழ்வுகளிலும் யானை பங்கேற்பது வழக்கம். ஜூலை 8ல் நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம் நடக்க உள்ளது. தேரோட்டத்திற்கு முன்பாக புதிய யானை வாங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் நிலவுகிறது.கோவிலில் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்ட ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மே 14ம் தேதி சென்னையில் ஹிந்து அறநிலையத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் புதிய யானை வாங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்தார். நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்துக்கு முன்பாக புதிய யானை வாங்க வேண்டும் என ஹிந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

சாத்தியமில்லை

தேரோட்டத்திற்கு முன் என்றில்லை, இனி எப்போதுமே யானை வாங்குவதும் சாத்தியமில்லை என்று யானை குறித்து விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். கடந்த 1972- ல் உருவாக்கப்பட்ட வன உயிரின பாதுகாப்புச் சட்டம், பிரிவு 64-ன் கீழ், 2011-ல் தமிழ்நாடு பிணை யானைகள் (மேலாண்மை மற்றும் பராமரிப்பு) விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது வளர்ப்பு யானைகள் பராமரிப்பை கண்காணிக்க குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இத்தகைய சட்டங்களை பின்பற்றி யானைகளை வளர்ப்பது பராமரிப்பது அத்தனை எளிதானதாக இல்லை. மேலும் தமிழக கோவில்களில் யானைகள் இறந்த பிறகு புதிய யானைகள் வாங்குவதில் தொடர் சிரமம் ஏற்பட்டுள்ளது.பல கோவில்களில் யானைகள் இறந்த பிறகு புதிய யானைகள் வாங்கப்படவில்லை. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் யானை 2013ல் இருந்தது. அதன்பிறகு அங்கு புதிய யானை வாங்கப்படவில்லை. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் யானை, ருக்கு 2018ல் இறந்தது, கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மகாதேவர் கோவில் யானை கோபாலன் 2014ல் இறந்தது. தென்காசி மாவட்டம் இலஞ்சி கோவிலில் யானைகள் தெய்வானை 2010லும் வள்ளி 2019 லும் இறந்தன. இந்த கோயில்கள் எதிலும் இதுவரை யானைகள் வாங்கப்படவில்லை. தீட்சிதர்கள் நிர்வாகத்தில் இருக்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் மட்டும் 2023 செப்டம்பரில் முன்பு புதிய யானை சிவகாம லட்சுமி வாங்கப்பட்டுள்ளது. நெல்லையப்பர் கோவிலுக்கு யானை வாங்கித் தர நன்கொடையாளர்கள் தயாராக இருந்தாலும் கூட யானைகளை கொண்டு வந்து பராமரிப்பதும் அவற்றிற்கான குறுங்காடு போன்ற அமைப்பு ஏற்படுத்துவதும் சாத்தியமில்லாததாக உள்ளது.எனவே வரும் மே 14ல் ஹிந்து அறநிலைத்துறையும் வனத்துறையும் நடத்தும் கூட்டம் ஒரு பெயரளவுக்கான கூட்டமாக மட்டுமே இருக்கும் என்று கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mecca Shivan
மே 13, 2025 10:14

அடுத்த திட்டம்.. யானை பாகங்களை யானை முதலாளி ஆகும் திராவிட யானை வளர்ப்பு திட்டம்.. இதில் கரைவேட்டி பாகங்களை வைத்து யானை வாங்க மாநில வங்கிகள் மூலம் கடன்கொடுத்து, அவர்களுக்கு பயிற்சி கொடுத்து அதற்கும் ஒரு தொகை ஒதுக்கப்படும் அந்த யானைகளை ஒரு பெருந்தொகை நபர் மூலமாக அறநிலையத்துறைக்கு மாத வாடகையில் லீசில் கொடுத்து, பாகன் மற்றும் 2 உதவியாளர்கள் சம்பளம் அனைவரும் கரைவேட்டிகள் சாப்பாடு மற்றும் தங்கும் இடம் அறநிலையத்துறையே கொடுத்து குறைந்தது 150 யானைகள் வாங்கி இந்த திட்டத்தை நிறைவேற்றலாம் ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை