உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஆரம்பம்: ஆசிரியர்கள் திடீர் "போர்க்கொடி

இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஆரம்பம்: ஆசிரியர்கள் திடீர் "போர்க்கொடி

திருநெல்வேலி : இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நேற்று ஆரம்பமானது. பாளை மையத்தில் ஆசிரிய, ஆசிரியைகள் போர்க்கொடி தூக்கியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.தமிழகத்தில் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் சார்பில் பி.எட் தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவடைந்தது. இத்தேர்வு விடைத்தாள்கள் திருத்துவதற்காக தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை ஆகிய 5 மையங்கள் அமைக்கப்பட்டது.தென் மாவட்டங்கள் அளவிலான விடைத்தாள் திருத்தும் மையம் பாளை சேவியர் கல்லூரியில் நடந்து வருகிறது. இதில் ஆங்கிலம் பாட தவிர மற்ற விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது.

வரும் 26ம் தேதியுடன் இப்பணி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இடைநிலை ஆசிரியர் பயிற்சி:இந்நிலையில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வுகள் முடிவடைந்து இத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நேற்று முதல் ஆரம்பமானது. நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் அளவிலான விடைத்தாள் திருத்தும் மையம் பாளை சாராள் தக்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது.விடைத்தாள் திருத்தும் பணிக்காக இந்த நான்கு மாவட்டங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் நேற்று காலையிலேயே குவிந்தனர். ஆனால் இவர்களுக்கு உரிய ஆணைகள் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. இதனால் மதியம் வரை இவர்கள் காத்திருந்தனர்.

தொடர்ந்து மதியத்திற்கு பிறகு விடைத்தாள்களை திருத்த வாய்ப்பு இல்லை என்று சில ஆசிரிய, ஆசிரியைகள் தெரிவித்ததால் மையத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அதிக விடைத்தாள்களை அளித்தால் திருத்த முடியாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதற்கிடையில் மதியத்திற்கு பிறகு இவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொருவருக்கும் தலா 5 விடைத்தாள்கள் மட்டும் வழங்கப்பட்டது. இந்த விடைத்தாள்களை திருத்திய பின்னர் ஆசிரிய, ஆசிரியைகள் புறப்பட்டு சென்றனர். நாளை (25ம் தேதி) முதல் வழக்கம் போல் விடைத்தாள் திருத்தும் பணி நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை