மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
வள்ளியூர் : இடிந்தகரையில் கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி சாகும்வரை தொடர் உண்ணாவிரதத்தில் மூன்றாவது நாளில் உண்ணாவிரதம் இருந்தவர்களில் ஆறு பேர் மயக்கமடைந்ததால் அவர்களுக்கு பந்தலிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கூடன்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணு மின் நிலையத்தில் முதல் அணுமின் உலையில் மின் உற்பத்தி இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் அணுமின் நிலையத்தில் மின்உற்பத்தி தொடங்கப்படும்போது அணுஉலையால் ஆபத்து ஏற்படும் என்றும், கூடன்குளம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள கிராமப்பகுதி மக்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும், மீனவர்களின் வாழ்வாதரமான மீன்பிடிக்கும் தொழில் பாதிக்கப்படுமென்ற அச்சத்தில் பொதுமக்கள் அணுமின் நிலையத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக கடந்த ஞாயிற்றுகிழமை இடிந்தகரை புனித லூர்து அன்னை ஆலயம் முன் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சாகும்வரை தொடர் உண்ணாவிரதம் இருக்க 127 பேர் முடிவு செய்து உண்ணாவிரதம் இருந்தனர். இதற்கு ஆதரவு தெரிவித்து முதல் நாள் சுமார் 3 ஆயிரம் பெண்கள் உட்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 2ம் நாள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மதிமுக., பொது செயலாளர் வைகோ, தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன்அம்புரோஸ் அடிகளார், சுவாமி தோப்பு பாலபிரஜாபதி அடிகளார் உட்பட கிறிஸ்தவ பாதிரியார்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டக்காரர்களுடன் அரசு அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதனால் நேற்று 3வது நாளாக உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்தது. உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் கலந்து கொண்டு பேசிகையில், ''கூடன்குளம் அணுஉலையினால் தமிழகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. பொதுமக்கள் நடத்தும் போராட்டத்திற்கு வணிகர் சங்கமும் ஆதரவு தெரிவிக்கிறது. இதன் ஒரு பகுதியாக வரும் 20ம் தேதி நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட வணிகர்கள் கடையடைப்பு போராட்டமும், உண்ணாவிரத போராட்டமும் நடக்கிறது'' என்றார். தொடர்ந்து மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்து வருபவர்களில் ஹரிகரன்(22) என்ற இளைஞர் மயக்கமடைந்தார். அவர் சிகிச்சைக்காக இடிந்தகரையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 5 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அவர்களுக்கு போராட்ட குழுவின் சார்பில் உண்ணாவிரத பந்தலில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கூடன்குளம் பஜாரில் அனைத்து கடைகளும் 3வது நாளாக நேற்றும் அடைக்கப்பட்டிருந்தது.நெல்லை மாவட்ட கடற்கரை மீனவ கிராமங்களான கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, கூத்தங்குளி, உவரி, கூடுதாழை, கூட்டப்பனை ஆகிய கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் கிராம மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப 2வது நாளாக நேற்றும் அனுப்பவில்லை. இதனால் உண்ணாவிரத போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது.
29-Sep-2025
25-Sep-2025