உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / திருக்குறுங்குடி கோவிலில் கல்வெட்டுகள் படியெடுப்பு

திருக்குறுங்குடி கோவிலில் கல்வெட்டுகள் படியெடுப்பு

சென்னை:திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி ஒன்றியத்தில் உள்ள திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் கல்வெட்டுகளை, மத்திய தொல்லியல் துறையினர் படியெடுத்து வருகின்றனர்.திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஒன்றியத்தில், நாகர்கோவில் - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில், வள்ளியூரிலிருந்து இருந்து 12 கி.மீ., தொலைவில் உள்ளது திருக்குறுங்குடி. இங்கு, 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த அழகிய நம்பிராயர் என்ற பெயரில் பெருமாள் கோவில் உள்ளது. திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரால் பாடல் பெற்ற இத்தலத்தை, சுந்தரபாண்டியன் உள்ளிட்ட பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள், நாயக்கர்கள் உள்ளிட்டோர் பராமரிக்கவும், வழிபாட்டு நிகழ்வுகளை நடத்தவும், பல்வேறு தானங்களை வழங்கி உள்ளனர். அவை குறித்த தகவல்கள், இந்த கோவிலில் கல்வெட்டுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்தக் கோவில் தற்போது ஜீயர் மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் உள்ள கல்வெட்டுகளை, மத்திய தொல்லியல் துறையின் தென்மண்டல கல்வெட்டு பிரிவு இயக்குனர் முனிரத்தினம் மேற்பார்வையில், பாலமுருகன் உள்ளிட்ட கல்வெட்டு ஆய்வாளர்கள் நேற்று படியெடுக்கும் பணியை துவங்கினர்.இது குறித்து, பாலமுருகன் கூறியதாவது:இந்த கோவிலின் கோபுரங்கள், கருவறை, பிரகாரங்கள் உள்ளிட்ட இடங்களில், 13ம் நுாற்றாண்டில் இருந்து தொடர்ச்சியாக பொறிக்கப்பட்ட நிறைய கல்வெட்டுகள் உள்ளன. மத்திய தொல்லியல் துறை, 1905லும், 1960லும், இந்த ஊர் கோவில்களில் உள்ள 15 கல்வெட்டுகளை படியெடுத்துள்ளது. அவற்றில், இந்த கோவிலைச் சேர்ந்த ஒன்பது கல்வெட்டுகள் உள்ளன. நாங்கள் தற்போது ஆய்வு செய்ததில், பல கல்வெட்டுகள் படியெடுக்காதது தெரியவந்தது. தெற்கு பிரகாரத்தில் இருந்து கல்வெட்டுகளை படியெடுக்க துவங்கி உள்ளோம். முழுமையாக படியெடுத்த பின் தான், கல்வெட்டு தகவல்கள் தெரியவரும்.இவ்வாறு அவர் கூறினார்.திருக்குறுங்குடி கல்வெட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 21, 2024 13:51

மத்திய தொல்லியல் துறையினர் படியெடுத்து வருகின்றனர் ........... மாநில அரசு ???? ஒன்லி உண்டியலை ஓப்பன் பண்ணுறதுக்கா ????


கிஜன்
செப் 20, 2024 02:11

அழகிய நம்பியையும் மலை நம்பியையும் காண கண் கோடி வேண்டும்..... பாடல் பெற்ற ஸ்தலம் .... "எங்கனயோ அன்னைமீர்காள் என்னை முனிவது நீர் ...நங்கள் கோல திருக்குறுங்குடி நம்பியை கண்டபின் .... சங்கினொடும் நேமியோடும் தாமரை கண்களோடும் செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் மனமே "... நம்மாழ்வாருக்கு மட்டுமல்ல நமக்கும் தான் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை