கடையநல்லூர் : 'சாம்பவர்வடகரை டவுன் பஞ்.,நகராட்சி அந்தஸ்து பெறுவதற்கு அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்' என அதிமுக வேட்பாளர் செல்வி மூர்த்தி தனது தேர்தல் பிரசாரத்தில் பேசினார்.கடையநல்லூர் தொகுதி சாம்பவர்வடகரை டவுன் பஞ்., தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் செல்வி மூர்த்தி தனது தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். சாம்பவர்வடகரை அக்ரஹாரம் பகுதியிலிருந்து தனது தேர்தல் பிரசாரத்தினை துவக்கி பேசியதாவது:- ''சாம்பவர்வடகரை தொடர்ந்து அதிமுகவின் கோட்டையாக விளங்கி வருகிறது. இந்த டவுன் பஞ்.,சினை பொறுத்தவரை கடந்த முறை சுமார் 2 கோடி ரூபாய் செலவில் மக்கள் நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எல்லாம் சாம்பவர்வடகரை பஞ்.,சில் தன்னிறைவு பெறும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மீண்டும் அதிமுக சார்பவர்வடகரை டவுன் பஞ்.,சினை நிச்சயமாக கைப்பற்றும் என நம்புகிறேன். மீண்டும் அதிமுக வெற்றி பெற்றால் அக்ரஹாரம் சாலைகள் எல்லாம் சிமென்ட் சாலைகளாக மாற்றப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்படும். விந்தன்கோட்டை பகுதிக்கு பஸ் வசதி செய்துதரப்படும். மதுரவாணி அம்மன் கோயில் அருகில் அறநிலைத்துறை நிர்வாகம் சார்பில் திருமண மண்டபம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்திட டவுன் பஞ்., சார்பில் வலியுறுத்தப்படும்.தாமிரபரணி மற்றும் உள்ளூர் குடிநீர் ஆதாரங்களுக்கு தனித்தனியாக வாட்டர் டேங்குகள் அமைக்கப்படும். சாம்பவர்வடகரை டவுன் பஞ்., நகராட்சி அந்தஸ்து பெற அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்'' என்றார்.வேட்பாளருடன் வார்டு வேட்பாளர்கள் வி.பி.மூர்த்தி, வக்கீல் வெங்கடேஷ், மாடசாமி முதலியார், முத்தையா, கிருஷ்ணம்மாள், நடராஜன், செல்வி ரவி, திருமலை செல்வம், இசக்கி, தங்கேஸ்வரி, ராஜேந்திரன் மற்றும் சாம்பவர்வடகரை பேரூர் அதிமுக செயலாளர் காந்திபாண்டியன், எம்.ஜிஆர். மன்ற செயலாளர் சுடலை முதலியார், நகர பொருளாளர் வேல்சாமி, குழந்தைவேல், முருகன், நல்லமுத்து உட்பட பலர் உடன் சென்றனர்.