100 நாள் திட்ட தொழிலாளர்கள் 2 மாதமாக சம்பளமின்றி அவதி
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட 43 ஊராட்சிகளிலும் தலா 200 பேர் வீதம், நுாறு நாள் என்னும் மஹாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களுக்கு, ஒரு நாளைக்கு, 280 - 300 ரூபாய் வரை என, மாதம் 10,000 ரூபாய் வரை சம்பளமாக வழங்கப்படுகிறது.நுாறு நாள் திட்ட தொழிலாளர்களுக்கு, இரு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், இவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே, கலெக்டர், நுாறு நாள் திட்ட தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் சம்பள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''மத்திய அரசிடமிருந்து, நுாறு நாள் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க நிதி ஒதுக்கீடு, ஊரக வளர்ச்சித் துறைக்கு வந்துள்ளது. அந்த நிதியை மாவட்டங்களுக்கு பிரித்து கொடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு வந்தவுடன், சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என தெரிவித்தார்.