| ADDED : ஜூலை 11, 2024 01:18 AM
திருவள்ளூர்:திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ள புதுச்சத்திரம் அருகே, கூவம் ஆறு இரண்டாக பிரிகிறது. ஒன்று, மதுரவாயல், வழியாக, நேப்பியர் பாலம் அருகே, கடலில் கலக்கும் வகையில் செல்கிறது. மற்றொன்று, பங்காரு கால்வாய் என, பிரிந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் வகையில் உள்ளது.இந்த பங்காரு கால்வாயில், வெள்ளவேடு அருகே, பகுதிவாசிகள் மற்றும் வணிக நிறுவனத்தினர்கள் குப்பை மற்றும் இறைச்சி, கோழிக்கழிவுகளை கொட்டி வருகின்றனர். ஊராட்சியில சேகரமாகும் குப்பையையும் துாய்மை பணியாளர்கள் கொட்டி வருகின்றனர். இதனால், சாலையோரம் வாகனங்களில் செல்வோர் மற்றும் பகுதிவாசிகள் துர்நாற்றத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்த கால்வாயை நீர்வள ஆதாரத்துறையினர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் புதர் மண்டிக் கிடப்பதோடு தற்போது குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளதால் ஏரிக்கு நீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் பங்காரு கால்வாயில் குப்பை கொட்டுவதை தடுக்கவும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரும் வகையில் கால்வாயை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.