மெதுார் - கோளூர் சாலையில் சிறுபாலத்திற்கு தடுப்பு அவசியம்
பொன்னேரி: பொன்னேரி அடுத்த மெதுார் பகுதியில் இருந்து கோளூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில், ஆண்டார்தோப்பு கிராமம் அருகே, கால்வாயின் குறுக்கே சிறுபாலம் உள்ளது.இந்த சாலை வழியாக கோளூர், அண்ணாமலைச்சேரி, தேவம்பட்டு, கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளுக்கு தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.சிறுபாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர் இல்லை. இதனால் எதிர் எதிரே வாகனங்கள் கடக்கும்போது வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர். இப்பகுதியில் எச்சரிக்கை ஏதும் இல்லாததால் இரவு நேரங்களில் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பள்ளி பேருந்துகள் இந்த வழித்தடத்தில் சென்று வரும் நிலையில், பயணியர் மற்றும் பள்ளி மாணவர்களின் நலன்கருதி, சிறுபாலத்திற்கு தடுப்பு சுவர் மற்றும் எச்சரிக்கை பலகைகள் அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.