உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புதிய மின்வழித்தடம் அமைக்கும் பணி ஜவ்வு

புதிய மின்வழித்தடம் அமைக்கும் பணி ஜவ்வு

ழவேற்காடு: பழவேற்காடு மீனவப்பகுதியில், 30 கிராமங்களுக்கு பொன்னேரி அடுத்த மெதுார் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. இங்கு, 9,000 மின் பயனீட்டாளர்கள் உள்ளனர்.இப்பகுதிக்கு துணைமின் நிலையத்தில் இருந்து மின்சாரம் கொண்டு செல்லும் மின்வழித்தடம் அமைத்து, 30 ஆண்டுகள் ஆன நிலையில், கம்பங்கள், ஒயர்கள் காலாவதியாகி உள்ளன.காஞ்சிவாயல், திருப்பாலைவனம், போலாச்சியம்மன்குளம், ஆண்டார்மடம் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களிலும், கழிமுகப்பகுதிகளிலும், மின்கம்பங்கள் அமைத்து கொண்டு செல்லப்படுகின்றன.மழை, வெள்ள காலங்களில், விவசாய நிலங்களில் உள்ள மின்கம்பங்கள் சாய்ந்தும், மின் ஒயர்கள் அறுந்தும் விடுகின்றன. கழிமுகப் பகுதிகளில் மழைநீர் நிரம்பி, அதிலுள்ள மின்கம்பங்களையும் தண்ணீர் சூழ்ந்து வருவதால் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது.மழை, வெள்ள காலங்களிலும், ஏற்படும் மின்தடையை உடனடியாக சரிசெய்ய முடியாத நிலையில், மீனவ கிராம மக்கள் இருளில் மூழ்குகின்றனர். இதை தவிர்க்கவும், நிரந்தர தீர்வு காணும் வகையிலும், மெதுார் - பழவேற்காடு இடையே மாநில நெடுஞ்சாலையை ஒட்டி புதிய மின்வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டு, கடந்த, 2021ல் பணிகள் துவங்கப்பட்டன.இப்பணிகள் கடந்த, மூன்று ஆண்டுகளாக மந்த கதியில் நடைபெறுகின்றன. போலாச்சியம்மன்குளம் - ஆண்டார்மடம் வரை மின்வழித்தடத்திற்கான பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. மற்ற இடங்களில் அதற்கான பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருவதால், இந்த ஆண்டு பருவமழையின்போதும், பழவேற்காடு மீனவ கிராமங்களில் மின்வினியோகம் பாதிப்பு தொடரும் நிலையே உள்ளது.மின்வாரியத்தினர் துரித நடவடிக்கையாக மெதுார் - பழவேற்காடு இடையேயான மின்பாதை பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை