திருவாலங்காடில் வெண்டை விதை தட்டுப்பாடு தோட்டக்கலை கைவிரிப்பால் விவசாயிகள் வேதனை
திருவாலங்காடு, திருவாலங்காடு வட்டாரத்தில், பூனிமாங்காடு, மணவூர், கனகம்மாசத்திரம், திருவாலங்காடு உள்ளிட்ட நான்கு குறுவட்டங்கள் உள்ளன. இங்கு, 350 ஏக்கர் நிலத்தில் வெண்டைக்காய் சாகுபடி நடைபெறுகிறது.சில வாரங்களாக விவசாயிகள் வெண்டை விதை வேண்டி திருவாலங்காடில் அமைந்துள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகத்திற்கு வருவதாகவும், அங்கு விதைப் பற்றாக்குறை காரணமாக விவசாயிகளுக்கு இல்லை என, திருப்பி அனுப்பப்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து திருவாலங்காடைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:தரமான வெண்டை விதைகள் விதைத்தால், 40 நாட்களில் அறுவடை துவங்கி, மூன்று மாதங்கள் வரை தொடர்ந்து அறுவடை செய்யலாம். தற்போது தோட்டக்கலை துறை சார்பில் வழங்கப்படும் விதைகள் கிடைப்பதில்லை.இதனால், தரமற்ற விதைகளை கடைகளில் வாங்கி விதைப்பதால், இலை சுருட்டு போன்ற நோய்கள் தாக்கி, அறுவடை பாதிப்பு ஏற்படுகிறது. தனியார் நிறுவனம் வாயிலாக வாங்கப்படும் வெண்டைக்காய் விதை, ஒரு கிலோ, 8,000 ரூபாய் முதல், 12,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.விதையும் வீரியம் இல்லாததால் விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட தோட்டக்கலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,'கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் இணைக்கப் பெற்ற கிராமத்திற்கு மட்டும் தற்போது வெண்டை விதை வழங்கப்படுகிறது. 'வெண்டை விதை தட்டுப்பாடு உள்ளது. எனவே, சில விவசாயிகளுக்கு சென்று சேராமல் உள்ளது. அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது' என்றார்.