உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வேண்பாக்கம் அரசு மகளிர் பள்ளியில் மாணவியரின் சுகாதாரம் கேள்விக்குறி

வேண்பாக்கம் அரசு மகளிர் பள்ளியில் மாணவியரின் சுகாதாரம் கேள்விக்குறி

பொன்னேரி:பொன்னேரி, வேண்பாக்கம் பகுதியில் ஜெயகோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆறு வகுப்பு முதல், பிளஸ் 2 வகுப்பு வரை, 1,500க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர்.இங்கு மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறை வசதிகள் இல்லை. மொத்த மாணவர்களுக்கு என, 21 கழிப்பறைகள் மட்டுமே உள்ளன.அவையும் உரிய பராமிப்பு இன்றி கிடக்கின்றன. கழிப்பறை வளாகங்களை சுற்றிலும் செடிகள் அதிகளவில் வளர்ந்தும், குப்பை குவிந்தும் இருக்கின்றன.பத்து நிமிட இடைவேளை நேரத்தில் அனைத்து மாணவியரும் கழிப்பறை செல்லும்போது, பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். நீண்டநேரம் நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. பெரும்பாலான மாணவியர் உடனடியாக வகுப்பறை திரும்ப வேண்டியதால், உடல் உபாதைகளை கழிக்காமல் திரும்புகின்றனர்.இதனால் அவர்கள் உடல்நல பாதிப்புகளுக்கும் உள்ளாகின்றனர். பரிதவிக்கும் மாணவியர் 'மாணவர் மனசு' புகார் பெட்டியிலும், இது தொடர்பான குறைகளை கடிதமாக எழுதி போட்டு உள்ளனர். குறைந்த கழிப்பறைகளும், அவை பராமரிக்கப்படாமலும் இருப்பது தொடர்கிறது. இது பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே பள்ளிக் கல்வித் துறையின் மீது அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.இது குறித்து அவர்கள் கூறியதாவது:இங்கு படிக்கும் மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறைகள் அமைப்பதில் யாரும் கவனம் செலுத்துவதில்லை. இதனால், அவர்களுக்கு தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளது. பல முறை பள்ளி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை இல்லை. பள்ளி நிர்வாகம், 'நிதியில்லை' என, கைவிரிக்கிறது.'மாணவர் மனசு'க்கு இங்கு நடவடிக்கை இல்லை. கண்துடைப்பிற்கு பள்ளிகளில் இதுபோன்ற புகார் பெட்டிகள் வைக்கப்படுகின்றனவா, மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி, மாணவியரின் இன்னலை தீர்க்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கழிப்பறைகள் சுகாதாரமற்று இருப்பது குறித்து பெற்றோரிடம் இருந்து புகார்கள் வந்ததை தொடர்ந்து அங்கு ஆய்வு செய்யப்பட்டது. கழிப்பறைகளை சுகாதாரமாக வைத்திருக்க பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டது. கூடுதல் கழிப்பறை அமைப்பது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி