பெண்ணிடம் செயின் பறித்தவர் சிக்கினார்
திருத்தணி:திருத்தணி நகரம், அரக்கோணம் சாலை, வ.உ.சி.தெருவில் வசிப்பவர் கந்தசாமி மனைவி கலாவதி, 50; இவர் கடந்தாண்டு நவம்பர் மாதம் 7ம் தேதி திருத்தணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மகன் சதீஷூன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடித்துவிட்டு இரவு 10:30 மணியளவில் வீடு திரும்பினார். திருத்தணி ----- அரக்கோணம் சாலையோரம் நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள் திடீரென கலாவதி கழுத்தில் அணிந்திருந்த, 6 சவரன் தங்கசெயினை பறித்து தப்பினர்.இதுகுறித்து கலாவதி அளித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில், நேற்று, இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையிலான போலீசார் கலாவதியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த முருகன், 52, பாபு, 42, ஆகிய இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து செயினை பறிமுதல் செய்தனர்.