நெமிலிச்சேரி ரவுண்டானாவில் வாகன ஓட்டிகள் திக்... திக்
ஆவடி, சென்னையில் நிலவும் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், 62 கி.மீ., துாரம் உடைய வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை அமைக்கப்பட்டுள்ளது.இதில், வண்டலுார் -நெமிலிச்சேரி இடையிலான சாலை 2013ல் திறக்கப்பட்டது. நெமிலிச்சேரி - மீஞ்சூர் இடையிலான சாலை 2018ல் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. அதேபோல், ஆவடி அடுத்த பட்டாபிராம், நெமிலிச்சேரி அருகே சென்னை - திருத்தணி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. தினமும், லட்சக்கணக்கான வாகனங்கள் இப்பகுதியை கடந்து சென்று வருகின்றன.இந்த வெளிவட்ட சாலை முழு பயன்பாட்டிற்கு வந்ததில் இருந்து, நெமிலிச்சேரி ரவுண்டானாவின் கீழ் மற்றும் நெமிலிச்சேரி அணுகு சாலையின் இரு மார்க்கத்திலும், மின் விளக்கு இல்லாமல் இருள் சூழ்ந்து காட்சியளிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்திலே, அப்பகுதியை கடந்து வருகின்றனர். விபத்து உயிர்பலி அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.