உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா பணி...விறுவிறு!: மப்பேடில் ரூ.1,200 கோடியில் உருவாகிறது

பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா பணி...விறுவிறு!: மப்பேடில் ரூ.1,200 கோடியில் உருவாகிறது

கடம்பத்துார்: திருவள்ளூர் மாவட்டம், மப்பேடில் 1,200 கோடி ரூபாய் முதலீட்டில் அமையவுள்ள, பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.இந்திய அரசின் பாரத் மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரமாண்ட திட்டங்களில் முதன்மையானவற்றில் ஒன்றாக, மப்பேடு பகுதியில் அமையவுள்ள பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா உள்ளது. இதுபோன்ற 35 பூங்காக்கள் நாடு முழுதும் உருவாக்கப்பட உள்ளன.இதன் மூலம் சரக்கு போக்குவரத்து செயல்திறன் மேம்பட்டு செலவுகள் குறையும், காற்று மாசும் குறையும். மேலும் அதிநவீன சரக்கு மேலாண்மை அமைப்பின் மூலம், ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்து செல்லப்படும் சரக்கு போக்குவரத்து தடையின்றி அமையும்.திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு ஊராட்சியில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், 'நேஷனல் ஹைவே லாஜிஸ்டிக்ஸ்' மேலாண்மை நிறுவனம் மற்றும் சென்னை துறைமுகம் ஆகியவை இணைந்து, பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் 181 ஏக்கர் பரப்பளவில் 1,200 கோடி ரூபாய் முதலீட்டில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காவை தொடங்க 2021ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.காணொலி காட்சி மூலம் நடந்த நிகழ்சியில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் டில்லியில் இருந்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் மற்றும் மத்திய சாலை போக்குவரத்து இணை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.தமிழக தொழில் துறை வரலாற்றில் இது ஒரு முக்கியமான நாள் ஆகும். தமிழக அரசுடன் இணைந்து பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் பல்முனைய சரக்குப் போக்குவரத்துப் பூங்காவை மத்திய அரசு தமிழகத்தில் தொடங்குவது உண்மையில் மகிழ்ச்சி அளிப்பதாக, ஒப்பந்தம் கையெழுத்தான போது முதல்வர் தெரிவித்தார்.

முதலாவது பூங்கா

இதுகுறித்து பல்முனைய சரக்கு பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தியாவில் 35 இடங்களில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா அமையவுள்ள நிலையில், தமிழகத்தில் அமையும் முதலாவது பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காவாக இது அமைந்து உள்ளது. இந்தப் பூங்கா அமையும் பகுதி மிக மிக முக்கியமான தொழில் பகுதியாக இருக்கிறது. பெரிய தொழிற்சாலைகள் திரளாக அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதுார், பிள்ளைப்பாக்கம் மற்றும் ஒரகடம் ஆகிய பகுதிகளுக்கு மிக அருகில் இப்பூங்கா அமைய உள்ளது.இந்த பூங்கா சென்னை எல்லை சுற்றுவட்டச் சாலைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. சென்னை விமான நிலையம், சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகம் ஆகியவற்றை சிறப்பான முறையில் இது இணைக்க வழிவகை செய்கிறது. உலகத்தரம் வாய்ந்த அனைத்து வசதிகளும் இப்பூங்காவில் அமைய இருக்கிறது.

நெடுஞ்சாலை விரிவாக்கம்

இந்த பூங்காவை சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் சென்னை எல்லை சுற்றுச்சாலையுடன் இணைக்கும் வகையில், இப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன.முதல் கட்டமாக திருவள்ளூர் மாவட்டம் மண்ணுார் முதல் சரக்கு பெட்டக பூங்கா வரை 5.4 கி.மீ., துாரமுள்ள சாலை 58 கோடியில் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.இதில் சாலையோர மழைநீர் கால்வாய்கள் அமைக்கும் பணி, சாலை விரிவாக்கம், மீடியன் சீரமைப்பு பணிகள் நடைபெறவுள்ளன. மேலும் கொட்டையூர் கிராமத்திற்கு செல்ல மாற்றுப்பாதை பணிகளும் நிறைவடைந்துள்ளன. இந்த பல்முனை சரக்கு பூங்கா பணிகள் மூன்று கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.பல்முனை சரக்கு பூங்காவிலிருந்து 10 கி.மீ., துாரமுள்ள கடம்பத்துார் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு ரயில் பாதை அமைக்கும் பணிகளும் நடைபெற உள்ளன.

புதிய வேலை வாய்ப்புகள்

இதன் மூலம், சரக்குப் போக்குவரத்துச் செலவு கணிசமான அளவில் குறையும் என்பது இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.டிட்கோ, சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகம், ரயில் நிகாஸ் நிகாம் லிமிடெட், மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஆகியவை இணைந்து செயல்படுத்தும் இந்த புதுமையான முயற்சியின் காரணமாக, தமிழகத்தில் உள்ள 10,000 இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். கடம்பத்துார் ரயில் நிலையத்திலிருந்து ரயில்பாதை அமைக்கப்பட்டு, பல்முனை சரக்கு பூங்கா பயன்பாட்டிற்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.

சிறப்புகள்

 ↓ரயில் மற்றும் சாலை இணைப்புகளுடன் சரக்கு முனையம் ↓சேமிப்புக் கிடங்கு ↓குளிர்பதன சேமிப்புக் கிடங்கு ↓இயந்திரங்கள் மூலம் சரக்குகளைக் கையாளுதல் ↓மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளான சுங்க அனுமதி பெறுதல், சோதனை வசதிகள் போன்ற உலகத்தரம் வாய்ந்த வசதிகள் அனைத்தும் அமைக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ