ஆக்கிரமிப்பால் கடும் நெரிசல் குறட்டை விடும் அதிகாரிகள்
ஊத்துக்கோட்டை, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஊத்துக்கோட்டை பேரூராட்சி அமைந்துள்ளது. ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர், நகரி, புத்துார், திருப்பதி, கடப்பா, கர்நுால், நந்தியால், ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள், இங்குள்ள பஜார் பகுதியை கடந்து தான் செல்ல வேண்டும்.தினமும், 20,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் இச்சாலையை கடந்து செல்கின்றன. போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், வியாபாரிகள் ஆக்கிரமித்து கடை வைத்துள்ளனர். இதனால், பாதசாரிகள் நடப்பதற்கும், வாகனங்கள் கடந்து செல்லவும் போதுமான இடமின்றி கடும் நெரிசல் ஏற்படுகிறது.தினமும் காலை - மாலை நேரங்களில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், இங்குள்ள பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள், பள்ளிகளுக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாத நிலை உள்ளது.இங்கு டி.எஸ்.பி., தாசில்தார், போக்குவரத்து போலீசார் உள்ளிட்ட உயரதிகாரிகள் அலுவலகங்கள் இருந்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர். அரசு மருத்துவமனைக்கு செல்லும், '108' ஆம்புலன்ஸ் நெரிசலில் சிக்கி, உயிரிழப்பு சம்பவங்கள் நிகழும் அபாயம் உள்ளது.எனவே, மாவட்ட எஸ்.பி., உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.