நீர்நிலை புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க மனு
கும்மிடிப்பூண்டி:அய்யர்கண்டிகை கிராமத்தில் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள நீர்நிலை புறம்போக்கு நிலங்களை மீட்க வலியுறுத்தி, கிராம மக்கள் சார்பில் தாசில்தாரிடம் மனு அளிக்கப்பட்டது.அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:கவரைப்பேட்டை அடுத்த கெட்ணமல்லி ஊராட்சிக்கு உட்பட்டது அய்யர்கண்டிகை கிராமம். அங்கு, 478, 479/1, 510 ஆகிய சர்வே எண்களில், 11 ஏக்கர் பரப்பளவில் நீர்நிலை புறம்போக்கு நிலங்கள் உள்ளன.அதை, அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து இருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆக்கிரமிப்புகளால், மழைக்காலங்களில் வரத்து கால்வாய் வழியாக நீர்நிலைகளுக்கு மழைநீர் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.மழைக்கு முன் ஆக்கிரமிப்புகளை அகற்றினால், அந்த இடத்தில் 100 நாள் வேலை மேற்கொண்டு நீர்நிலைகளை பாதுகாக்க வழிவகுக்கும் என, கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மனுவை பெற்றுக் கொண்ட கும்மிடிப்பூண்டி தாசில்தார் சரவணகுமாரி மற்றும் பி.டி.ஓ., சந்திரசேகர் ஆகியோர், 'உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தனர்.