துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலை திட்டம் கூவத்தின் நடுவில் துாண்கள் அமைப்பதால் அபாயம்
சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டும் பணிக்கு, கூவத்தின் நடுவில் துாண்கள் அமைக்கப்படுவதால், நீரோட்டம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறையும் இதை கண்டும் காணாமல் உள்ளது.சென்னை துறைமுகத்திற்கு கனரக வாகனங்களில் வரும் சரக்குகள், போக்குவரத்து பிரச்னை காரணமாக, இரவு வேளைகளில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இதனால், துறைமுகத்தின் வருவாய், நாட்டின் அன்னிய செலாவணி பாதிக்கப்படுகிறது.இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், மதுரவாயலில் இருந்து சென்னை துறைமுகம் வரை இரண்டடுக்கு மேம்பாலம் கட்டுவதற்கு, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்தது. இதன் மேல் அடுக்கில்துறைமுகம் செல்லும் வாகனங்களும், கீழ் அடுக்கில் மற்ற வாகனங்களும் அனுமதிக்கப்பட உள்ளன. மொத்தம் 20.6 கி.மீ.,யில் அமைய உள்ள இந்த இரண்டடுக்கு மேம்பால கட்டுமான பணிக்கு 5,885 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.மும்பையைச் சேர்ந்த ஜெ.குமார் என்ற கட்டுமான நிறுவனத்திடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இதற்காக, அமைந்தகரை, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கூவத்தில் கட்டட இடிபாடுகளை கொட்டி, துாண்கள் அமைக்க கடந்தாண்டு மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இதனால், வடகிழக்கு பருவமழையின்போது, கூவத்தில் நீரோட்டம் பாதிக்கும் என்பதால், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அக்டோபர் மாதத்திற்கு முன்பாக கட்டட இடிபாடுகளை அகற்ற உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி கட்டட இடிபாடுகள் அகற்றி கரையோரம் குவித்து வைக்கப்பட்டது.ஆனால், எதிர்பார்த்த அளவில் வடகிழக்கு பருவமழையால் நீரோட்டம் இல்லை. வடகிழக்கு பருவமழை ஓய்ந்த நிலையில், தற்போது இரண்டடுக்கு மேம்பாலம் கட்டுமான பணிகள் வேகமெடுத்துள்ளன. இதற்காக, அமைந்தகரை, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கூவத்தின் நடுவில், துாண்கள் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. இதனால், கூவத்தில் நிரந்தரமாக நீரோட்டம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை அரசும், சென்னை மாநகராட்சியும் கண்டுகொள்ளாமல் உள்ளன.
எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை!
இது குறித்து, சென்னை மண்டல நீர்வளத்துறை அதிகாரி கூறியதாவது:சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில், பகிங்ஹாம் கால்வாய்க்குள் துாண்கள் அமைத்து, மேம்பால ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. கடந்த 2009ம் ஆண்டு, சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே, மேம்பாலம் கட்டுவதற்கு சேத்துப்பட்டு, எழும்பூர் உள்ளிட்ட இடங்களில், கூவத்தின் நடுவில் துாண்கள் அமைக்கப்பட்டன.இரண்டு பணிகளுக்கும் நீர்வளத்துறை எதிர்ப்பு தெரிவித்தது. அ.தி.மு.க., அரசு 2011ல் எடுத்த நடவடிக்கையால், சென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பாலம் கட்டும் பணிகள் நிறுத்தப்பட்டன.அதன்பின், 2024ம் ஆண்டு இரண்டடுக்கு மேம்பாலம் கட்டும் பணிகள் துவங்கின. இதற்கும் நீர்வளத்துறை எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். அதை கண்டுகொள்ள வேண்டாம் என, துறையின் முக்கிய புள்ளி கூறிவிட்டார். எனவே, எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. வடகிழக்கு பருவமழையின்போதுதான், இதனால், பிரச்னை ஏற்படுமா என்பது தெரியும்.இவ்வாறு அவர் கூறினார். - - - நமது நிருபர் -